பிரதமர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடுகளையும், பாஜகவின் கொள்கைகளையும் உறுதியாக எதிர்த்து தன் வாதத்தை முன் வைக்க கூடியவர் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா. நாடாளுமன்றத்தில் அவர் பேசும் வீடியோ அனைத்தும் சமூக வலைதளங்களில் பெரிய வரவேற்பை பெறும். நேற்றை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனத்தை முன் வைத்தார் மஹுவா. 


அவர் பேசியது, ‘’ இன்று இந்தியா எதிர்க்கொள்ளும் அனைத்து துன்பங்களுக்கு காரணம் மோடி அரசு இந்தியாவை கைவிட்டதால் மட்டும் இல்லை. ஊடகத்துறை மற்றும் நீதித்துறையும் இந்தியாவை கைவிட்டுவிட்டது. 


பாலியல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய ஒருவர், நாட்டின் தலைமை நீதிபாதியாக அமர்ந்து, தன் குற்றச்சாட்டை தானே விசாரித்து கொண்டு, தன்னை விடுவித்துக்கொண்டாரோ அப்பவே நீதிதுறையின் புனிதம்  சிதைந்துவிட்டது என்றார். உடனே மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மற்றும் பா.ஜ.க எம்.பி நிஷிகண்ட் துபே மஹுவாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, முன்னாள் தலைமை நீதிபதி பற்றி பேச கூடாது என்றார்கள். அதனால் தலைமை நீதிபதி பற்றி பேசாமல் பிற விஷயங்களைப் பேச மஹுவா அனுமதிக்கப்பட்டார். 


அரசாங்கத்தை கேள்விகேட்ட ஒரே காரணத்துக்காக காவல்துறையை மக்கள் மீது ஏவி துன்புறுத்துகிறது இந்த அரசு. மத வெறி, அதிகாரம், பொய் பிரசாரம் போன்றவற்றிக்கு பின்னால் இருந்துக்கொண்டு செயல்படுவதை அவர்கள் தைரியம், துணிச்சல் என்கிறார்கள். ஆனால் அதன் பெயர் கோழைத்தனம். 


18 வயதான பெண் சூழலியல் செயற்பாட்டாளருக்கும், அமெரிக்கப் பாப் பாடகிக்கும் பதில் சொல்ல துணியும் அரசு, கடும் குளிரில் போராடும் சொந்த நாட்டின் விவசாயிகளை கவனிக்க நேரமில்லை? 90 நாட்களுக்கு மேலாக போராடும் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகள் இருக்கிறதா என்பதை பற்றி கூட கவலையில்லை. அதற்கு ஒரு குழு அமைத்து ஆய்வு செய்யவும் இல்லை. 


பாஜகவின் கூட்டணி கட்சிகள் கூட இந்த வேளாண சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள், நாட்டு மக்கள் என அனைவரும் எதிர்க்கும் சட்டத்தை பாஜக அமல்படுத்த துடிப்பது ஏன்? ” என்றார்