13 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில்,  இது வரை 22 பேர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் 13 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த பாஜக நிர்வாகி, காவல் ஆய்வாளர் விவகாரத்தை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது. அந்த அளவுக்கு அது மிக பயங்கரமான வழக்காக பார்க்கப்படுகிறது. 

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், சென்னை வண்ணாரப்பேட்டை மகளிர் காவல் நிலையம் போலீசார் தற்போது ஒரு அதிர்ச்சியூட்டும் செய்திக் குறிப்பை வெளியிட்டு உள்ளனர். அதில், “கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி, அமுதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று மதன் குமார், ஷாகிதா பானு, செல்வி, சந்தியா, மகேஷ்வரி என்கிற மகா, வனிதா, விஜயா, கார்த்திக் ஆகியோர் சேர்ந்து 13 வயதான தனது மகளை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகப் புகார் மன அளித்தார். 

“இந்த புகார் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்பட்டது என்றும், இந்த வழக்கு விசாரணையில், மேலும் சில நபர்கள் இதில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்த நிலையில், 44 வயதான ராசேந்திரன், 33 வயதான காமேஸ்வ ராவ், 45 வயதான புகழேந்தி, 35 வயதான முகமது அசாருதின், 32 வயதான பசுலுதின், 39 வயதான வினோபாஜி, 36 வயதான கிரிதரன், 36 வயதான அனிதா என்கிற கஸ்தூரி, 62 வயதான ராஜ சுந்தரம், மாரீஸ்வரன், பொன்ராஜ், நாகராஜ், வெங்கட்ராமன் என்கிற அஜய், கண்ணன் ஆகிய 22 பேர் சிறுமி தொடர்பான குற்றச் செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது” என்று” அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக, இவர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்” என்றும், அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதே போல், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக மருத்துவ உதவிகள், ஆலோசனைகள், இன்னும் பிற சட்ட உதவிகள், கொடூரமான குற்றங்களால் ஏற்படும் அதிர்ச்சிகள், களங்கத்திலிருந்து விடுபடுவதற்காக உதவிகள் என்று, பல வகையிலும் வழங்கப்பட்டு வருகிறது” என்றும், அதில் கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், “மேற்கண்ட பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண்பதற்கு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டு, அந்த குற்றம் தொடர்பான அறிவியல் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டதோடு, சாட்சிகளிடம் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இந்த வழக்கு தொடர்பாக, பாதிக்கப்பட்ட குழந்தைக்குச் சீர்திருத்த மற்றும் மறுவாழ்விற்குத் தேவையான நடவடிக்கைகளைச் சென்னை பெருநகர காவல் துறை மேற்கொண்டு உள்ளது என்றும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக ஒரு நபர் நியமிக்கப்பட்டு உள்ளார்” என்றும், அதில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

இவற்றுடன், “சிறப்பு நீதிமன்றம் இடைக்கால இழப்பீட்டு உதவித் தொகையான 1.5 லட்சம் ரூபாயைப் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மற்றும் அவரது குடும்பத்திற்கு வழங்க உத்தரவிட்டுள்ளது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.