குடும்ப தகராறு காரணமாக, மாமியாரை மருமகனே கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே இடிஞ்சகல் புதூரைச் சேர்ந்த பஞ்சப்பன் - பொன்னம்மாள் தம்பதியினர் வசித்து வந்தனர். 

பஞ்சப்பன் - பொன்னம்மாள் தம்பதியினர், தங்களது மகளை, அந்த பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

இதனையடுத்து, மாமியார் பொன்னம்மாளுக்கும் அவரது மருமகன் முருகனுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. 

இந்த நிலையில், இவர்களுக்குள் நேற்றிரவு நேரத்தில் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, அவர்களுக்குள் குடும்ப பிரச்சனை தொடர்பாக கடும் வாக்கு வாதம் ஏற்பட்டு உள்ளது.

இந்த சண்டையில், கடும் ஆத்திரமடைந்த மருமகன் முருகன், தனது மாமியார் பொன்னம்மாளை கத்தியால் குத்தி உள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த பொன்னம்மாள், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து அக்கம் பக்கத்தினர் அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கீழக்கரை காவல் துறையினர், உயிரிழந்த பொன்னம்மாளின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அங்குள்ள கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், இந்த கொலை சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார், மாமியாரை கொலை செய்த மருமகன் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.

அதே போல், உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் கோயில் பூசாரி கொல்லப்பட்டது தொடர்பாக, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் இஸ்லாம் நகர் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட கிராமத்தில் இன்று காலை 7 மணி அளவில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க கோயில் பூசாரி ஒருவர் கொலை செய்யப்பட்டுக் கிடப்பதாக அங்குள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், உயிரிழந்தவரின் உடலை மீட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த, விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் 50 வயதான ஜெய்பால் சிங் என்பதும், இவரை அதே பகுதியைச் சேர்ந்த 25 வயதான ராம்வீர் சிங் என்பவர் கொலை செய்ததும் தெரிய வந்தது. 

மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட ராம்வீர் சிங் மது போதைக்கு அடிமையானவர் என்றும், அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றதால், மிகுந்த கவலையில் இருந்த அவர், பூசாரியைத் தாக்கியிருக்கலாம் என்றும், அப்போது அவர் எதிர்பாராத விதமாக உயிரிழந்திருக்கலாம்” என்றும், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, தலைமறைவாக உள்ள ராம்வீர் சிங்கை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.