நடனம், நடிப்பு, ஸ்டைல் என ரசிகர்களை ஈர்த்து வருபவர் தெலுங்கு சூப்பர்ஸ்டார் அல்லு அர்ஜுன். இவர் நடிக்கும் படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆகி வருகிறது. தமிழகத்திலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் இப்போது நடித்து வரும் திரைப்படம் புஷ்பா. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உட்பட ஐந்து மொழிகளில் உருவாகிறது. 

சுமார் நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். தேவிஶ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். சுகுமார் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதி, வன அதிகாரியாக நடிக்கிறார் என்று முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தேதிகள் காரணமாக அவர் விலகியதால் பாலிவுட் நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

இந்தப் படம் செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான கதையை கொண்டது. கொரோனாவால் தடைபட்ட இதன் ஷூட்டிங், மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா வில்லனாக நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால், அதை படக்குழு உறுதி செய்யவில்லை.

இதற்கிடையே, இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆகஸ்ட் 13 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது. இதை நடிகர் அல்லு அர்ஜுன், தனது சோசியல் மீடியா பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் அறிவிப்பில் இடம்பெற்ற புதிய ஸ்டில், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதில், நடிகர் அல்லு அர்ஜுன், முரட்டு லுக்கில் கையில் கோடாரியுடன் காட்டுக்குள் அமர்ந்திருப்பது போல அந்த போஸ்டர் வெளியிடப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் நடிகர் அல்லு அர்ஜுனின் ஃபால்கான் கேரவன் விபத்தில் சிக்கி இருக்கிறது. ஆந்திர மாநிலம் ரம்பச்சோதவரம் காட்டுப் பகுதியில் இதன் ஷூட்டிங் சமீபத்தில் நடந்தது. ஷூட்டிங்கை முடித்துவிட்டு படக்குழு ஐதராபாத் திரும்பியது. நடிகர் அல்லு அர்ஜுனின் சொகுசு, ஃபால்கான் வேனிட்டி வேனும் திரும்பிக் கொண்டிருந்தது. வேனில், அல்லு அர்ஜுனின் மேக்கப் டீம் மற்றும் படக்குழுவினர் இருந்தனர். 

கம்மம் அருகே வந்தபோது, டிரைவர் பிரேக் பிடித்தார். அப்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று வேனிட்டி வேனில் மோதியது. இதில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும், வேன் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அந்த டிரைவர் கம்மம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்தபோது வேனில் அல்லு அர்ஜுன் இல்லை என்ற செய்தியை அறிந்த பிறகே ரசிகர்கள் நிம்மதியாகினர். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.