கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியாக உள்ள படம் ஜகமே தந்திரம். ஒய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன் போன்றோர் நடித்துள்ளார்கள். தனுஷின் 40ஆவது படமான, ஜகமே தந்திரம் கடந்த வருடமே வெளிவந்திருக்க வேண்டிய படம். ஆனால், கொரானோ தொற்று காரணமாக வெளிவராமல் தள்ளிப் போய்விட்டது. 

இந்தப் படம் ஓடிடியில் வெளியாகிறது என்று கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் செய்திகள் வெளியாகின. இதனை அப்படத்தின் தயாரிப்பாளர் சஷிகாந்த் அப்போது மறுத்தார். திரையரங்குகள் திறக்கப்படும் வரை பொறுமையாக இருக்கவும். வதந்திகளை நம்பவேண்டாம். ஒட்டுமொத்தக் குழுவும் ரகிட ரகிட என தனுஷ் பாடுவதைத் திரையரங்கில் காணக் காத்திருக்கிறது என்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறி இருந்தார் என்பது நினைவு கூறத்தக்கது

பின்னர் மீண்டும் படத்தை ஓடிடியில் வெளியிடும் தினத்தன்றே தியேட்டர்களிலும் வெளியிடலாமா என தயாரிப்பாளர் யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. ஜகமே தந்திரம் படத்தை முதலில் திரையரங்குகளில் தான் வெளியிட வேண்டும் என்பது தனுஷின் விருப்பமாக இருக்கிறது. மாஸ்டர் படம் திரையரங்கில் வெளியானபோது அதற்கு தனுஷ் ஆதரவு தெரிவித்தார்.

இதன் பின் தனுஷ் சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், சினிமா பிரியர்கள், எனது ரசிகர்கள் போலவே,’ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன் என்று கூறியிருந்தார். தற்போது வரை இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை.

இந்நிலையில், ஜகமே தந்திரம் படத்தை ஓடிடியில் வெளியிட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். படத்தை ஓடிடியில் வெளியிட வேண்டாம் என தயாரிப்பு நிறுவனத்திற்கு தனுஷ் ரசிகர்கள் வேண்டுகோள் விடுக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. 

அந்த போஸ்டரில், ஜகமே தந்திரம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிட்டு அன்புத் தலைவர் தனுஷ் ரசிகர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மற்றும் திரையரங்கை சார்ந்து வாழும் தொழிலாளர்களுக்கும் புத்துயிர் அளிக்குமாறு தயாரிப்பாளர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் D43 படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதெராபாத்தில் நடந்து வருகிறது. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.