சசிகலாவின் தமிழக வருகை யொட்டி, தமிழ்நாடு காவல் துறை சில அதிரடியான புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. 

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகள் தண்டனை பெற்று, சிறைத் தண்டனை அனுபவித்து வந்த சசிகலா, கடந்த 27 ஆம் தேதி தண்டனை காலம் முடிந்து சிறையில் இருந்து விடுதலையானார். 

சசிகலா விடுதலையானது போது, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால், அவர் சிகிச்சை பெறும் விக்டோரியா மருத்துவமனைக்கே சென்று, சிறைத்துறையினர் கையொப்பம் பெற்று, அவரை விடுதலை செய்தனர். 

இதனால், சசிகலா சிகிச்சை பெறும் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை வளாகத்தில் அவரது ஆதரவாளர்கள் குவிந்தனர். அதன் தொடர்ச்சியாக, சசிகலா, நாளை சென்னை திரும்புகிறார். 

இதன் காரணமாக, சசிகலாவுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அமமுக வினர் திட்டமிட்டு வருகின்றனர். அதன் படி, ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடி சென்னை திரும்பும் சசிகலாவை வரவேற்க காவல் துறையினரிடம் முறையான அனுமதி வேண்டி அமமுகவினர் சார்பில், சென்னை காவல் துறையிடம் அனுமதிக் கடிதம் அளித்தனர். 

இந்தக் கடிதம் தொடர்பாக எவ்வித முடிவும் எடுக்கப்படாத நிலையில், பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் சென்னை காவல் துறை தரப்பில்  தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

அத்துடன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், வெளியிட்ட அறிக்கையில், சசிகலா வரவேற்பு நிகழ்ச்சிக்கு காவல் துறை தரப்பில் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. 

இதனை மறைமுகமாக மறுக்கும் வகையில், தமிழ்நாடு காவல் துறை சார்பில் தற்போது புதிய எச்சரிக்கை அறிவிப்பு ஒன்று தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. 

அந்த அறிவிப்பில், “தமிழ்நாடு காவல் துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும், அதன் படி மாநிலத்தில் சமய, அரசியல் ரீதியான பிரச்னைகள் ஏதுவுமின்றி பொது அமைதியை நிலை நாட்டி சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வருகின்றனர்” என்றும், குறிப்பிட்டு உள்ளனர்.

மேலும். “இந்தச் சூழ்நிலையில், சில குறிப்பிட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கங்களுக்காகப் பிற அமைப்புகளைப் போல் தங்களைப் பாவித்துக் கொண்டு பெருந்திரளாகக் கூடி சட்டத்தைக் கையில் எடுத்து போக்கு வரத்தையும், பொது மக்கள் அமைதியையும் பாதிக்கும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன” என்று, சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

“இது போன்ற செயல்கள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதுடன், மாநிலம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ இடையூறாக இருக்கும் என்பதால், யாரும் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என தமிழ்நாடு காவல்துறை கேட்டுக்கொள்கிறது என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இத்தகைய சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இதன் மூலம் எச்சரிக்கப்படுகிறது” என்றும், தமிழக காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, வருகிற 8 ஆம் தேதி சசிகலா சென்னை வருவதையொட்டி அமமுகவினர் அவரை வரவேற்கப் பெருந்திரளாகக் கூடி வரவேற்பு நிகழ்ச்சி நடத்தவுள்ள நிலையில், தமிழ்நாடு காவல் துறை சார்பில் இப்படி ஒரு அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளதாக சக அரசியல் கட்சியினரும் தற்போது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முக்கியமாக, “சசிகலா வருகையின் போது பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை மீறி பேரணி சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரித்துள்ளார்.

இதனிடையே, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.