ஜூன் மாதம் வரை இணைய வழியே மாணவர்களுக்கு பாடம் நடத்தப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவத் தொடங்கியதைத் தொடர்ந்து, 2020 பிப்ரவரி 28ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது.இதனால் பள்ளி,கல்லூரி வளாகங்கள் மூடப்பட்டன.இந்நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வந்த தமிழக அரசு பள்ளி கல்லூரிகளுக்கும் தளர்வுகளை அறிவித்தது. 


சுமார் 9 மாதங்களுக்கு பின் கடந்த நவம்பர் மாதம் இளநிலை மற்றும் முதுநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் துவங்கப்பட்டன.  மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.


இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகளை அறிவித்த அரசு, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணார்களுக்கும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் 8ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் துவங்கப்படும் என  அறிவித்தது.


பின்னர், செமஸ்டருக்கான பாடதிட்டங்கள் நடத்தவேண்டி இருப்பதால்அனைத்து இளநிலை, முதுநிலை வகுப்புகள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என உயர்கல்வித்துறை நேற்று அரசாணை வெளியிட்டது. 


இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் ஜூன் மாதம் வரை இணைய வழியே வகுப்பு நடைபெறும் என அறிவித்துள்ளது.


சென்னை பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் அதிகம் படித்து வருகின்றனர். இவர்கள் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது தங்கள் நாடுகளுக்கு சென்றுவிட்டனர். 
தற்போது  வரும் 8ஆம் தேதி கல்லூரிகள் திறக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்ததால் 
வெளிநாட்டில் இருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தியா வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.


மேலும் சேப்பாக்கம் மற்றும் மெரினா மாணவர் விடுதிகள் புனரமைப்பு பணிகள் நடைபெறுவதன் காரணத்தால்  தேர்வுகள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெறும் எனவும், 8ம் தேதி நேரடி வகுப்புகள் இல்லை எனவும்  சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் செய்முறை வகுப்புகளுக்கு மட்டும் மாணவர்கள் நேரடியாக வரவேண்டும் என்றும் சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.


மாணவர்களுக்கு பாடங்களில் இடக்கூடிய சந்தேகங்களை ஆசிரியர்களை தொடர்பு கொண்டோ அல்லது பல்கலைக்கழகத்திற்கு நேரில் வருகை தந்தோ தீர்த்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

- லெனின்