10 ஆம் வகுப்பு மாணவியை அந்தரங்கமாகப் படம் எடுத்து மிரட்டிய மின்சார வாரிய ஊழியர் மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வருகிறார். 

கொரோனா விடுமுறைக்குப் பிறகு, தற்போது தான் மீண்டும் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், குறிப்பிட்ட அந்த மாணவிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமலபுரம் பகுதியைச் சேர்ந்த மின்சார வாரியத்தில் தற்காலிகமாக பணிபுரியும் தமிழ்ச் செல்வன் என்ற இளைஞருக்கும் கடந்த 5 மாதங்களாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. 

மாணவி உடனான இந்தப் பழக்கம், நாளடைவில் அது காதலாக மாறி உள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பயன்படுத்திக்கொண்ட அந்த மின்சார வாரிய தற்காலிக ஊழியர், காதலியான அந்த மாணவியை எல்லை மீறி மிகவும் ஆபாசமாகப் புகைப்படங்கள் எடுத்து உள்ளார். 

அதன் பிறகு, அந்த மாணவியிடமும், அவரது தாயாரிடமும் “நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்றும், இல்லை என்றால், நான் எடுத்துள்ள அந்த அந்தரங்கமான ஆபாச புகைப்படங்களை இணைய தளத்தில் வெளியிடுவேன்” என்றும், அந்த இளைஞன் பகிரங்கமாக இருவரையும் தொடர்ந்து மிரட்டி வந்து உள்ளான். 

இப்படியாக, அந்த இளைஞனின் மிரட்டல் எல்லை மீறி போகவே, பொறுத்துப் பொறுத்து பார்த்த அந்த மாணவியின் தாயார், இந்த மிரட்டல் சம்பவம் குறித்தும், தனது மகளை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்தது குறித்தும், உடனடியாக ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர், தமிழ்செல்வனிடம் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், மாணவியை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டி வந்தது உண்மை என்று தெரிய வந்தது. இதனையடுத்து, அந்த இளைஞனின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதில் உள்ள ஆபாச புகைப்படங்களை அழித்தனர்.

மேலும், மாணவியை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டிய அந்த இளைஞன் மீது போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர், நீதிமன்றத்தில் உத்தரவுப்படி, அவனை போலீசார் சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 4 வயது சிறுமிக்கு, பாலியல் வன்கொடுமை செய்த 57 வயது முதியவர், அதிரடியாகக் கைது செய்யப்பட்டு உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டு உள்ளார். இச்சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.