சேலம் அருகே கடந்த 5 ஆண்டுகளாக இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில், காதலி இரு முறை கரு கலைப்பு செய்தும், காதலியை கழற்றி விட்டு, வேறொரு பெண்ணை காதலன் திருமணம் செய்ய முயன்றதால், காதலி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மரவனேரி பிள்ளையார் நகரைச் சேர்ந்த 30 வயதான இந்து பிரியா என்ற இளம் பெண், 10 ஆம் வகுப்பு வரை படித்து இருக்கிறார். தன் படிப்பிற்கு ஏற்றார் போல், இந்த பெண் அந்த பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

அதே நேரத்தில் சேலம் செட்டிச்சாவடி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற துணை செயலாளர் ராஜ் என்பவரின் மகன் 30 வயதான கலைச்செல்வன், அந்த பகுதியில் மெக்கானிக்கல் பிரிவில் பட்டயப் படிப்பு முடித்து விட்டு, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, கலைச்செல்வன் சூப்பர் மார்கெட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற போது, அங்கு பணியாற்றி வந்த இந்து பிரியா உடன் நன்றாக அறிமுகம் ஆகி உள்ளது. இந்த அறிமுகம் இருவருக்கும் பழக்கமாக மாறி, இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலை மலரச் செய்துள்ளது. 

இப்படியாக, கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் காதலர்களாக மாறிய பிறகு, அந்த காதல் ஜோடிகள் இருவரும், அந்த பகுதியில் உள்ள பல இடங்களுக்கு உல்லாசமாக சென்று வந்துள்ளதாகவும், காதல் ஜோடிகளாக ஊர் சுற்றித் திரிந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படியாக, அவர்கள் ஜாலியாக சுற்றித் திரிந்த நிலையில், காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இந்த உல்லாச வாழ்க்கையில், இளம் பெண் இந்து பிரியா இரு முறை கருவுற்றுள்ளார். ஆனால், இரு முறையும் கருவைக் கலைத்து விடும் படி, காதலன் கூறியதால், அந்த பெண்ணும் வேறு வழியின்றி கருவை கலைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக காதலர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக, காதலன் கலைச்செல்வன், தனது செல்போன் எண்ணை மாற்றி விட்டு, சேலத்தில் இருந்து கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிக்கு சென்று சேர்ந்து விட்டார். ஊர் விட்டு ஊர் பணி மாறுதல் பெற்றதும், அங்கு காதலன் கலைச்செல்வனுக்கு நேற்று முன் தினம் வேறொரு பெண்ணுடன் சேலம் ஓமலூரில் திருமணம் நடைபெற இருந்தது.

ஆனால், இந்த தகவல் காதலி இந்து பிரியாவிற்கு எப்படியோ தெரிய வந்தது. இதனால், திருமணத்திற்கு முதல் நாள் கலைச்செல்வனை சந்தித்து, “என்னை திருமணம் செய்து கொள்ளும் படி” அந்த இளம் பெண் மன்றாடி உள்ளார். ஆனால், இதற்கு காதலன் மறுத்து விட்டதாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, அன்று காலை 11 மணி அளவில் சேலம் அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் இளம் பெண் இந்து பிரியா, தனது காதலன் தன்னை ஏமாற்றி விட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாகப் புகார் அளித்தார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் வழக்குப் பதிவு செய்யாமல், இழுத்தடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆனால், காதலி இந்து பிரியா அன்றைய தினம் காலை முதல் இரவு 11 மணி வரை காவல் நிலையத்தில் காத்துக்கிடந்து போராடினார். இதனால், பிரச்சனை பெரிதாகி விடும் என்று நினைத்த போலீசார், காதலன் கலைச்செல்வன் மீது, ஆபாசமாகத் திட்டியது, ஏமாற்றியது ஆகிய இரு பிரிவுகளின் கீழ் போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, காதலி இந்துபிரியா, வீட்டிற்குச் சென்றார். இதன் காரணமாக, அந்த திருமணம் தற்போது தடைப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.