கருக்கலைப்பு தடை சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, “என் உடல் என் விருப்பம்” என்று, பெண் ஒருவர் தனது நிர்வாண உடலில் எழுதி போராட்டம் நடத்திய சம்பம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலந்து நாட்டில் சமீபத்தில் கருக்கலைப்பு தடை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு, அந்நாட்டில் பலரும் தங்களது எதிர்ப்புகளைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

அதன் பகுதியாக, அந்நாட்டின் சமூக ஆர்வலரான ஃபெமன் என்ற பெண், “என் உடல் என் விருப்பம்” என்று, தனது நிர்வாண உடலில் எழுதி போராட்டம் நடத்தினர். 

மிகவும் தீவிரமான பெண்ணியக் குழுவின் உறுப்பினரான இவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் போலந்து நாட்டில் கருக்கலைப்பு செய்வதற்கான தடைக்கு எதிராக, அந்நாட்டின் கியேவில் உள்ள போலாந்து தூதரகத்திற்கு வெளியே நிர்வாண போராட்டம் நடத்தினார்.

அந்த போராட்டத்தின் போது, “என் உடல் என் விருப்பம்” என்று, ஆங்கிலத்தில் அந்த பெண்ணின் நிர்வாண உடலில் எழுதப்பட்டு இருந்தது.

சட்ட விரோத கருக்கலைப்புகளைக் குறிக்கும் ஒரு எதிர்ப்பு சின்னமாக அந்த பெண், தனது வாயில் கோட் ஹேங்கர்களை வைத்திருந்துள்ளார்.

அத்துடன், அந்த பெண்ணை போலீசார் கைது செய்ய வந்த போது, “சகோதரிகள் ஒடுக்கப்படுகிறார்கள்” என்று போலாந்து மொழியில் அவர் முழக்கங்களை எழுப்பினார். ஆனால், அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

அதே போல், போலாந்து பெண்களுக்கு ஆதரவாக நடைபெற்ற மற்றொரு போராட்டத்திற்காக, அங்குள்ள தூதரகம் அருகே ஏராளமான ஆர்வலர்கள் கூடினார்கள். 

அதில் ஒரு பெண், “பாதுகாப்பான கருக்கலைப்புகளைத் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்தால், பெண்கள் அரசாங்கத்தை கருக்கலைக்க முடிவு செய்யலாம்” என்று ஒரு பலகையை ஏந்திய படி தன் கையில் வைத்திருந்தார்.

கடந்த வாரம் போலந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம், தவறான வழியிலான கருவுறுதலை கருக்கலைப்பு செய்ய அனுமதிப்பது அரசியலமைப்பிற்குப் பொருந்தாது என்று தீர்ப்பளித்தது.

மேலும், இனி மேல் போலாந்து நாட்டில் பாலியல் வன்கொடுமை அல்லது முறையற்ற உறவு அல்லது தாயின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், பல பெண்கள் அந்நாட்டின் அரசாங்கத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதே போல், இங்கிலாந்து நாட்டில் உடைகள் அத்தியாவசியமற்றவை என வேல்ஸ் அரசு அறிவித்த தடைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வையில், உள்ளாடையுடன் கடைக்குச் சென்ற நபரின் வீடியோ ஒன்று, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

அரசின் இந்த கட்டுப்பாடுகள் குழந்தைகளின் உடைகள், படுக்கைகள் போன்றவற்றையும் தடை செய்து உள்ளன. இந்தத் தடையை மாற்றியமைக்க கோரும் மனுவில் இது வரை சுமார் 46 ஆயிரம் பேர் கையெழுத்துப் போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.