இந்திய திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகை மந்திரா பேடி. 1994-ம் ஆண்டு வெளியான சாந்தி என்ற தொலைக்காட்சி சீரியலின் மூலம் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 1995-ம் ஆண்டு தனது திரைப்பயணத்தை தொடர்ந்தார். பல சீரியல்களில் நடித்த போதும் பல்வேறு இன்டர்நேஷனல் கிரிக்கெட் போட்டிகளின் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தொகுப்பாளராகவும் இருந்தார். 2003-ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை யாரும் மறக்க முடியாது. அதில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து அசத்தினார். 

தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்ததால் பிஸியானார். கடந்த 2004-ம் ஆண்டு தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான மன்மதன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மருத்துவராக ஒரு காட்சியில் வந்தாலும், இவர் வரும் காட்சிக்கு கைதட்டல் பறந்தது. கடந்த ஆண்டு பிரபாஸ் நடித்து வெளியான சாஹோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மந்திரா. தொடர்ந்து வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். 

அவ்வப்போது மாலத்தீவில் ஓய்வை கழித்து வரும் மந்த்ரா பேடி, சமூக வலைதளங்களில் பகிரும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளம். குறிப்பாக பிகினியில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்க வைக்கும். இந்நிலையில் நடிகை மந்திரா பேடி, தனது சமூக வலைதள பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது மந்திரா பேடி தனது கணவர் ராஜ் கவுஷலுடன் சேர்ந்து பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். அந்த குழந்தைக்கு தாரா பேடி கவுஷல் என்று பெயரிட்டுள்ளனர். இந்த தம்பதி தங்களின் மகன் வீர் மற்றும் மகள் தாராவுடன் இருக்கும் ஃபேமிலி போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். 

இதுதொடர்பாக மந்திரா பேடி பதிவிட்டிருப்பதாவது, மேலிருந்து ஒரு ஆசீர்வாதம் போல அவள் எங்களிடம் வந்திருக்கிறாள். எங்களின் சின்ன பெண், தாரா. நான்கு வயதாகிறது. நட்சத்திரங்களைப் போல பிரகாசிக்கிறது அவளது கண்கள். செல்ல சகோதரியை தனது வீட்டிற்கு வரவேற்றுள்ளார் வீர். ஆசிர்வதிக்கப்பட்ட தாரா பேடி கவுஷல் 2020 ஜூலை 28 அன்று எங்கள் குடும்பத்தின் ஒரு பகுதியாக ஆனார் என்று மந்திரா பேடி தனது ஃபேமிலி போட்டோவை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் மந்திரா பேடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உங்களின் இந்த செயல் மிகவும் அற்புதமானது, உங்களால் நாங்கள் பெருமையடைகிறோம் என்று பாராட்டி வருகின்றனர் இணையவாசிகள். குழந்தையை வரவேற்றுள்ள மந்திரா பேடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது நம் கலாட்டா.