“பெண்களை இழிவுபடுத்திய நடிகர் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். 

புதுச்சேரி மாநிலம் உருளையன்பேட்டை பகுதியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மருத்துவக் கல்விக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் 50 சதவிகிதம் வழங்க வேண்டும்” என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், “தமிழ் நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியாது” என்று கூறி உள்ளது என்று சுட்டிக்காட்டிய திருமாவளவன், “இதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்றும் கூறினார்.

“ஒரு புறம் இந்துக்களுக்காகப் போராடுவதாகக் கூறி வரும் பாஜகவினர், இந்து பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கிறது” என்றும், பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். 

மேலும், “இதனைக் கண்டித்து வரும் 28 ஆம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றும், பாஜகவின் மூத்த தலைவர்கள் உள்பட பலர் நாவினை மீறி தலைவர்களை இழிவுபடுத்தி வருகின்றனர்” என்றும் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். 

குறிப்பாக, “பெண்களை இழிவுபடுத்திய நடிகர் எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்றும், அவர் வெளிப்படையாகவே கேள்வி எழுப்பினார்.

“இவை எல்லாம், தமிழ் நாட்டில் சாதி, மதம் பெயர்களால் வன்முறையைத் தூண்ட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகின்றனர்” என்பது எல்லோருக்கும் தெரிகிறது” என்றும், அவர் குறிப்பிட்டார். 

முக்கியமாக, “பெண்களைப் பற்றி பாஜகவினர் தவறாகக் கூறி வருகின்றனர் என்றும், எஸ்.வி சேகர் ஊடக பெண்களை இழிவாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்” என்றும், அவர் குற்றம் சாட்டினார்.

“ஆனால், அதே நேரத்தில், இப்படியாக பெண்களை இழிவாக பேசுபவர்கள் மீது தமிழ் நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்றும், அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். 

“ஆனால், நான் பேசியதைத் திரித்து அவமதிக்கும் வகையில் என்னைப் பற்றி சிலர் வேண்டும் என்றே, தவறாகப் பேசி வருகின்றனர்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

மேலும், “இப்படிப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் என் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்றும், மனுநூல் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நவம்பர் 3, 4, 5 தேதிகளில் மகளிர் விழிப்புணர்வு பரப்புரை விசிக சார்பில் நடத்தப்பட உள்ளது” என்றும், திருமாவளவன் தெரிவித்தார்.

“பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சிறுமிகள் மீதான வன்கொடுமை, தலித் மீதான வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன” என்றும், அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். 

“அதிமுகவினர் திமுகவுக்கு எதிராகத் தேர்தல் என்ற பெயரில் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர் என்றும், இது ஒரு அநாகரிகமான அரசியலாக இருப்பதாகவும்” திருமாவளவன் கவலைத் தெரிவித்தார்.

இதன் காரணமாக, “இத்தகைய போக்கை கைவிட வேண்டும் என்றும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ இட ஒதுக்கீடு 10 சதவீதம் பெற்றுத் தரப்படும் என புதுச்சேரி அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டது வரவேற்கத்தக்கது“ என்றும், திருமாவளவன் கூறினார்.

இதனிடையே, “பெண்களை கொச்சைப்படுத்திய திருமாவளவன், அவருக்குத் துணை போகும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தமிழ் நாட்டில் நடமாட முடியாது” என்று, பாஜக மாநில தலைவர் முருகன் முன்னதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.