“குஷ்புவையும் சேர்த்து மனுதர்மம் இழிவாக சொல்கிறது என்று தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசுகிறார்” என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கூறியுள்ளார். 

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 219 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான ராவணன் குடிலில் வீரவணக்க நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் பங்கேற்று வீர வணக்கம் செலுத்தினர்.

அதன் பிறகு, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “7.5 சதவீத விழுக்காடு மசோதாவை கிடப்பில் போட வேண்டும் என்பதற்காக ஆளுநர் தாமதிக்கிறார் என்றும், ஆனால் அதற்குள் தேர்தல் வந்து விடும் என்றும், இந்த பிரச்சனையில் நிர்பந்தம் கொடுக்கப்பட்டால் தமிழக அரசு அதனை ஏற்க கூடாது” என்றும், அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், “மனுஸ்மிருதியில் எழுதிய வாசகங்களை அண்ணன் திருமாவளவன் படிக்கிறார். என் அம்மாவை, என் தங்கையை என் குலப் பெண்களை இழிவுபடுத்தும் எதுவுமே எங்களுக்கு வேதமாகவும், புனிதமாகவும் இருக்க முடியாது. அதைத் தான் திருமாவளவன் பேசினார்” என்றும், சீமான் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக, “பாஜக விற்கு என்ன கோட்பாடு உள்ளது?” என்றும், சீமான் கேள்வி எழுப்பினார். 

“இந்தியாவிலேயே நெய் எரிக்கப்படுகிறது. பால் கொட்டப்படுகிறது. சிறுநீர் குடிக்கப்படுகிறது என்கின்றனர். இது தான் பாஜக வின் கோட்பாடு” என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

“மாட்டுக்கறி சாப்பிடும் நான் தீண்டத்தகாதவன், இழி சாதி, இழி மகன், தாழ்த்தப்பட்டவன். மாட்டு கோமியம் குடிக்கிற நீ மட்டும் உயர்ந்தவனா?” என்றும், சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

அத்துடன், “மாட்டு கோமியம் குடிக்கிற உன்னை விட, மாட்டு கறி சாப்பிடும் நான் எவ்வளவோ மேல்” என்றும், சீமான் விளக்கம் அளித்தார்.

“பெண்களுக்கு எதிராக திருமாவளவன் ஒரு போதும் பேச மாட்டார். ஆதரவாகத் தான் பேசுவார். நானும் பல முறை இப்படி பேசி இருக்கிறேன். இந்த போராட்டங்களுக்காக திருமாவளவன் மனுதர்மத்துக்கு எதிராகப் பேசுவதை நிறுத்த மாட்டார். அப்படியே அவர் பேசா விட்டாலும் நாங்கள் பேசுவோம்” என்றும், சீமான் வீரத்துடன் முழங்கினார்.

“மனுதர்மத்தை எழுதும் போது, கூடவே உட்கார்ந்து எழுதினவரு நடிகை குஷ்பு” என்றும், சீமான் நக்கலாக பேசி கிண்டலடித்தார். 

குறிப்பாக, “குஷ்புவையும் சேர்த்து மனுதர்மம் இழிவாக சொல்கிறது என்று தான் திருமாவளவன் பேசுகிறார்” என்றும், சீமான் சுட்டிக்காட்டினார்.

முக்கியமாக, “போன வாரம் காங்கிரசில் இருந்த போது இதே குஷ்பு திருமாவளவன் பேச்சை எதிர்த்திருப்பாரா?” என்றும், சீமான் கேள்வி எழுப்பினார்.

அதே நேரத்தில், “இப்போது, பாஜகவுக்கு போய் விட்டதால் நடிகை குஷ்பு, திருமாவளவன் பேச்சை எதிர்க்கிறார்” என்றும், குறிப்பிட்டார். 

“மனு தர்மத்தில் எந்த இடத்திலும் பெண்களை உயர்வாக பேசவில்லை. பொது மேடையில் தர்க்கம் செய்யவும் நான் தயாராக இருக்கிறேன்” என்றும் சீமான் சூளுரைத்தார். 
 
“சமூக குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் பாஜக வில் இணையும் போது, கைது செய்யப்படுகின்றனர். பாஜக வில் நடிகர்கள் இணைகிறார்களா அல்லது வாங்கப்படுகிறார்களா? என்ற கேள்வி தற்போது எழுந்து உள்ளது என்றும், சீமான் குறிப்பிட்டுப் பேசியதோடு கேள்வியும் எழுப்பி உள்ளார். 

மிக முக்கியமாக, “மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு இலங்கை கச்சேரியில் பாட வாய்ப்பு வந்த போது, எதிர்ப்பு வருமோ என்று நினைத்து, “போய் பாடிட்டு வரட்டுமா டா தம்பி” என்று என்னிடம், அவர் கேட்டார் என்று சீமான் தெரிவித்துள்ளார். சீமானின் இந்த பேட்டி, இணையத்தில் தற்போது ரைவலாகி வருகிறது.