'சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் போர் தொடுப்பதற்குப் பிரதமர் மோடி நாள் குறித்து விட்டார்" என்று உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வடன்ட்ரா தேவ் சிங் தெரிவித்து உள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. 

'பில்டப் பண்றமோ பீலா விடுறமோ அது முக்கியம் இல்ல.. இந்த உலகம் நம்மை உத்து கவனிக்கனும். அது தான் முக்கியம்” என்று, நடிகர் வடிவேலு ஒரு படத்தில் காமெடியாக பேசியிருப்பார். தற்போது, உத்தரப் பிரதேச மாநில பாஜக தலைவர் ஸ்வடன்ட்ரா தேவ் சிங் பேசியதைப் பார்க்கும் போது, அந்த வடிவேலு காமெடி தான் ஞாபகத்திற்கு வருகிறது.

இந்திய எல்லைப் பகுதியில் ஒரு பக்கம் பாகிஸ்தான் உடன் நீண்ட நாட்களாகத் தொடர்ந்து எல்லைப் பிரச்சனை நிலவி வரும் நிலையில், மறு பக்கம் புதிதாக சீனாவும், தன் பாட்டுக்கு எல்லைகளை ஆக்கிரமிப்பு செய்ய முயன்று, இந்தியாவுடன் பகையை சம்பாதித்துக்கொண்டு உள்ளது. இதன் காரணமாக, கடந்த சில மாதங்களாக இந்திய எல்லைப் பகுதியில் மிகவும் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதனால், இந்தியா - சீனா இடையிலான பேச்சு வார்த்தைகள் தற்போது வரை தொடர்ந்து நடைபெற்று வருகின்றனர். 

இந்நிலையில், சமீபத்தில் அதாவது கடந்த 23 ஆம் தேதி லடாக் எல்லையில் உள்ள சர்வதேச கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய - சீனப் படைகள் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இப்போது, இந்திய தரப்பில், அதிக அளவிலான வீரர்கள் எல்லையில் குவிக்கப்பட்டனர்.

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்து உள்ள, மத்திய பாதுகாப்புத் துறை ராஜ்நாத் சிங் நேற்று பேசுகையில், “சீனாவுடன் எல்லைப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரவே இந்தியா விரும்புகிறது என்றும், அதே சமயம், ஒரு அங்குல இடத்தைக் கூட யாரும் இந்தியாவிடம் இருந்து எடுக்க அனுமதிக்கமாட்டோம்” என்றும், அவர் பேசினார். 

இதனையடுத்து, உத்தரப் பிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டத்தில் சிக்கந்தர்பூர் தொகுதியில் எம்.எல்.ஏ. சஞ்சய் யாதவ் தலைமையில் கிருஷ்ணன் கோயிலுக்குப் பூமி பூஜை நடக்கும் நிகழ்ச்சி ஒன்று அங்கு நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், அந்த மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்  கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஒவ்வொன்றுக்கும் தேதி குறிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்.

“எப்போது நடக்க வேண்டும்? என்ன நடக்க வேண்டும்? அனைத்தும் முடிவு செய்யப்படுகிறது” என்று மர்மமாகவே பேசினார்.

அதன் தொடர்ச்சியாக, “அரசியலமைப்புச் சட்டம் 370 வது பிரிவு ரத்து, ராமர் கோயில் கட்டுவது என அனைத்துக்கும் தேதி குறிக்கப்பட்டது” என்றும் கூறினார்.

குறிப்பாக, “சீனா, பாகிஸ்தான் நாடுகளுடன் எப்போது போர் தொடங்க வேண்டும் என்பதற்குக் கூட பிரதமர் மோடி தேதி குறித்து விட்டார்” என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். 

அது மட்டுமல்லாமல் சமாஜ்வாதிக் கட்சி, பகுஜன் சமாஜ்கட்சி தொண்டர்களைத் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டும் பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங், அதிரடியாக சில கருத்துக்களைப் பேசினார்.

இதனையடுத்து, பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ் சிங்கின் கருத்தைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி சசி தரூர், தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.

அதில், “ஆக, பிரதமர் பெயர் தெரியாத எதிரியுடன் போருக்குத் தயாராகி விட்டார். எல்லையில் எந்த நிலமும் ஆக்கிரமிக்கப்பட வில்லை என பிரதமர் கூறுகிறார். ஆனால், தேதி குறிக்கப்பட்டது எனக் கூறியது அவருக்கு மட்டுமே தெரியும். ஆக இதைத் தான் பிரதமர் குறைந்த அளவு நிர்வாகம் என்று கூறுகிறாரா?” என்றும், அவர் கேள்வி எழுப்பி உள்ளார். இந்த கருத்து, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.