பெண் நீதிபதிகளை ஆபாசமாக பேசி இணையத்தில் வீடியோ வெளியிட்டதாக எழுந்த புகாரை அடுத்து, முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். 

சமீபத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற பெண் நீதிபதிகளை அவதூறாகப் பேசி ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன், கடந்த 22 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு கடும் கண்டன குரல்கள் எழுந்தன. முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதியே சக பெண் நீதிபதிகளை இப்படி விமர்சனம் செய்யலாமா? என்றும் கண்டன குரல்களும், கேள்விகளும் எழுந்தன.

இதனையடுத்து, பெண் நீதிபதிகளை அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்ட ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உயர் நீதிமன்ற மூத்த பெண் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினர்.

அதாவது, ஓய்வு பெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணனின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், வழக்கறிஞர் ஹென்றி டிபேன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீதிபதிகளின் பெயர்களைக் கூறி குற்றச்சாட்டுக்களைச் சுமத்திய முன்னாள் நீதிபதி சி.எஸ். கர்ணன் மீது தேசிய மகளிர் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி” உள்ளனர்.

அதே நேரத்தில், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களான வைகை, சுதா ராமலிங்கம், அன்னா மேத்யூ, நாகசைலா, கீதா உள்ளிட்ட பெண் வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவுக்கு கடிதமும் எழுதி உள்ளனர். அந்த கடிதத்தில், “பெண் நீதிபதிகளின் கண்ணியத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்ட முன்னாள் நீதிபதி கர்ணன் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றும், அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

அத்துடன், “ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் வெளியிட்ட வீடியோ பதிவை நீக்க உத்தரவிட வேண்டும்” என்றும், அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

“இது போன்ற சம்பவங்கள் இனி மேல் நடக்காமல் இருக்க, ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீது தற்போது மிக கடுமையான நடவடிக்கையைக் கட்டாயம் எடுக்க வேண்டும்” என்றும், அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

அதே நேரத்தில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி இல்லத்துக்கு முன்பாக, முன்னாள் நீதிபதி கர்ணனின் ஆதரவாளர்கள் சிலர் கூச்சலிட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் மீதும், நீதிமன்றத்தின் மீதும் அவதூறுகளைப் பரப்பும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பல வழக்கறிஞர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும், முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் தற்போது வழக்குப் பதிவு செய்து உள்ளனர். சமூக வலைத்தளங்களில் கர்ணன் வீடியோ வெளியிட்டது தொடர்பாக, சைபர் கிரைம் போலீஸ் இந்த வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த சி.எஸ். கர்ணன், அப்போதைய உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மீது குற்றச் சாட்டுகள் சுமத்தியதால், கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தியதோடு, தலித் என்பதால் தன்னைப் பாரபட்சமாக நடத்துவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதே கர்ணன் குற்றச்சாட்டுகள் சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.