துபாயில் நடைபெற்று வரும் ஐபிஎல் 13ஆவது சீசனில் சிறப்பாகப் பந்துவீசி இதுவரை 12 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் வருண் சக்ரவர்த்தி. குறிப்பாக, 42ஆவது லீக் போட்டியில் ஐந்து விக்கெட் வீழ்த்தி அசத்தினார். 29 வயதாகும் வருண் சக்ரவர்த்தி கிரிக்கெட் விரும்பியாக இருந்தாலும் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாகவே கிரிக்கெட் பழகியவர். ஆனால், விக்கெட் கீப்பர் பணிக்குப் பல போட்டிகள் இருந்ததால், கடந்த 2018-ம் ஆண்டில்தான் சுழற்பந்துவீச்சுக்கு மாறிப் பயிற்சி எடுத்தார். 

இதுவரை முதல்தரப் போட்டிகளில் 12 டி20 போட்டிகளில் மட்டுமே வருண் சக்ரவர்த்தி விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு நவம்பர் முதல் ஜனவரி வரை 3 மாதங்கள் நீண்ட பயணத்தை இந்திய அணி மேற்கொள்கிறது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று விதமான தொடர்களுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் டி20 போட்டித் தொடருக்கான இந்திய. அணியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி முதல் முறையாக வாய்ப்பு பெற்றுள்ளார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் விளையாடிவரும் வருண் சக்ரவர்த்தி சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருவதையடுத்து இந்த வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இந்நிலையில் வருண் சக்ரவர்த்திதமிழ் திரைப்படம் ஒன்றில் நடித்திருப்பது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. தமிழில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ஜீவா திரைப்படம் தான் அது. விஷ்ணு விஷால், ஶ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர். விஷ்ணு விஷால் பயிற்சி பெறும் அணியில், சக கிரிக்கெட் வீரராக இவர் சில காட்சிகளிலும் இடம் பெற்றுள்ளார். வருண் சக்ரவர்த்தியை ஜீவா திரைப்படத்தில் கவனித்த இணையவாசிகள், மீம்ஸ் போட்டு வைரலாக்கி வருகின்றனர். 

கிரிக்கெட் வீரர்கள் திரைப்படங்களில் நடிப்பது புதிதல்ல. பிரபலமாவதற்கு முன்னரே வருண் சக்ரவர்த்தி நடித்திருக்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். கிரிக்கெட் வீரர்கள் சடகோபன் ரமேஷ், ஸ்ரீகாந்த், லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. வெஸ்ட் இன்டீஸ் வீரர் பிராவோ ஒரு படத்தில் பாடல் காட்சிக்கு நடனமாடி இருப்பார். தற்போது ஹர்பஜன் சிங் மற்றும் இர்ஃபான் பதான் நடிப்பில் பிஸியாக இருந்து வருகின்றனர்.