எதார்த்தமான படைப்புகளின் மூலம் திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இயக்குனர்களில் ஒருவர் சீனு ராமசாமி. கூடல் நகர் படத்தின் மூலம் இயக்குனராக கால்பதித்த இவர் தென்மேற்கு பருவகாற்று, நீர்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே போன்ற சீரான படங்களை அளித்துள்ளார். இவர் இயக்கத்தில் உருவான இடம் பொருள் ஏவல் திரைப்படம் ரிலீஸாகாமல் உள்ளது. இதன் பிறகு விஜய்சேதுபதி வைத்து மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார். 

சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி 4-வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் காயத்ரி நாயகியாக நடித்துள்ளார். குரு சோமசுந்தரம், பேபி மானஸ்வி, அனிகா ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளார்கள். தென்காசி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற மாமனிதன் படப்பிடிப்பு, 2019-ம் ஆண்டு பிப்ரவரியுடன் முடிவடைந்தது. அதற்குப் பிறகு இந்தப் படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்தாலும், வெளியீடு குறித்து எந்தவொரு தகவலுமே வெளியாகவில்லை.

சமீபத்தில் மாமனிதன் வெளியீடு தொடர்பாக இயக்குனர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பதிவில், மாமனிதன் திரைப்படத்தில் நான்கு பாடல்களும் மற்றும் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகளையும் இசைஞானி இளையராஜா முடித்துவிட்டார். யுவன் சங்கர் ராஜா பாடலுக்கு இசைக்கலைஞர்கள் ஒருங்கிணைப்பு செய்துகொண்டிருக்கிறார். மற்றபடி வெளியீடு எப்போது என்பது தயாரிப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும். எனக்கு அதில் அதிகாரமில்லை என்று கூறியிருந்தார். மேலும் மாமனிதன் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களுடன் ஷூட்டிங் ஸ்பாட் நினைவுகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார் சீனு ராமசாமி. 

இந்நிலையில் சீனு ராமசாமி திடீரென இன்று (அக்டோபர் 28) காலை தனது ட்விட்டர் பதிவில் என் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உணர்கிறேன். முதல்வர் அய்யா உதவ வேண்டும். அவசரம் என்று பதிவு செய்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவருக்கு ஆறுதலாக பதிவு செய்து வருகின்றனர். இன்னும் சில மணித்துளிகளில் இயக்குனர் சீனு ராமசாமி பத்திரிகையாளர்களைச் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாவதை பார்க்க முடிகிறது. என்ன பிரச்சினை என்பது அப்போது தெரியவரும். 

சில தினங்களுக்கு முன்பு முத்தையா முரளிதரன் பயோபிக்கான 800 படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமானது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அப்போது, அதில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என்று முதல் ஆளாக வேண்டுகோள் வைத்தவர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று படத்தில் விஜய் சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர் சீனு ராமசாமி என்பது நினைவுக் கூரத்தக்கது.