“பிரதமர், அவரது மனைவியை வைத்து வாழ தகுதியில்லாதவர்” என்று, இயக்குநரும் நடிகருமான கரு.பழனியப்பன் சாடி உள்ளார். 

கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கலப்பு திருமணம் புரிந்தோர் நலச்சங்கத்தின் 21 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. 

இந்த நிகழ்வில், எம்.பி. பி.ஆர். நடராஜன், தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன், இயக்குநர் கரு.பழனியப்பன் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், சாதி மறுப்பு திருமணம் செய்த 20 ஜோடிகளுக்குத் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் விருதுகளும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

அதன் பிறகு, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருட்டிணன் பேசினார். அப்போது, “உச்ச நீதிமன்றத்தில் சாதி மறுப்பு திருமணத்தினால் தான், சாதி வெறியும் மத வெறியும் அடங்கும் என்று நீதிபதி கூறியுள்ளார்” என்று, சுட்டிக்காட்டினார். 

“இது மிகவும் சிறப்பான ஒரு பதிவு என்றும், சாதி என்பது அரசு வழங்கக்கூடிய இட ஒதுக்கீடு போன்றவற்றிற்கு தானே தவிர, திருமணங்களுக்கு இல்லை” என்பதனையும், அவர் சுட்டிக்காட்டினார்.

அதன் தொடர்ச்சியாகப் பேசிய எம்.பி. பி.ஆர்.நடராஜன், “திரைத்துறையில் இருக்கும் நடிகை ஒருவர் 'Go back modi' என்று கூறியதற்கு டிஜிபியிடம் புகார் அளித்து அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று, விமர்சித்துப் பேசினார். 

இந்த நிகழ்ச்சியின் இறுதியாகப் பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன், “காதலை எதிர்ப்பவர்களுக்கு மட்டும் தான் ஒரு நாள் காதலர் தினம். காதலிப்பவர்களுக்கு 
அனைத்து நாளுமே காதலர் தினம் தான்” என்று, குறிப்பிட்டார். 

மேலும், “சமூக வலைத்தளங்களில் வரும் ஒரு செய்தியை முழுமையாகக்கூடப் பார்க்காமல், தலைப்பினை பார்த்து கமேண்ட் செய்பவர்கள் தான் பாஜக வினர்” 
என்றும், அவர் சாடினார். 

முக்கியமாக, “இந்த நாட்டின் பிரதமர், அவரது மனைவியை வைத்து வாழ தகுதி இல்லாதவர்” என்று, மிக கடுமையாகச் சாடினார். 

“வருடத்திற்கு ஒரு முறை பிரதமர் அவர்கள், தனது தாயாருடன் புகைப்படம் எடுத்துப் பதிவிடுகிறார். ஆனால், ஏன் அவரது மனையிடம் புகைப்படங்கள் எடுப்பதில்லை” என்றும், அவர் கேள்வி எழுப்பினார். 

தொடர்ந்து பேசிய அவர், “பெண்கள் சிந்திக்கிறார்கள் என்பது தான் இவர்களது பிரச்சனை. ஓவியாவை ரஜினி என்று இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், ஓவியாவிற்கு ஒரு ஆர்மி உள்ளது” என்று பேசி முடித்தார். இந்த செய்தி, சமூக வலைத்தளங்களில் தற்போது வரலாகி வருகிறது.