கோவை பச்சாபாளையத்தில் , முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு திருமண நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு, சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவில் அதிக விருதுகள் பெற்ற மாநிலம் தமிழகம் தான்  என தெரிவித்தார்.


மேலும் அவர், ‘’ ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளில் திருமணங்கள் நடத்தப்படுகிறது. அதிமுகவின் ஆட்சியில் மட்டும் தான் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறும். அதிமுக சாதி, மதங்களுக்கு அப்பாற்ப்பட்ட கட்சி என்பதற்கு இந்த திருமணங்களே சாட்சி. மேலும் அதிமுக சார்பில் தாலிக்கு தங்கம் திட்டம் , திருமண உதவி திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் 6,010 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் 2,98,849 அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.


திமுக திட்டங்கள் மட்டும் தான் அறிவிக்கும். ஆனால் அதை நிறைவேற்றுவதில்லை. ஆனால் அதிமுக வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்சி என்பதால் தான் தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறோம். மேலும் இந்தியாவில் அதிக விருது பெற்ற மாநிலம் தமிழகம் தான்.” என்றார்.