சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி அதிகாலையில் தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, சித்ரா தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க கூடாது என வற்புறுத்தியதாகவும், அவர் நடத்தையில் சந்தேகம் கொண்டதாகவும் ஹேம்நாத் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு, சித்ராவின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர். 


கடந்த டிசம்பர் 14ம் தேதி கைது செய்யப்பட்ட ஹேம்நாத், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை. மேலும் எனக்கும் சித்ராவுக்கும் இடையில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.  எந்த குற்றமும் செய்யாத தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார்.


 சித்ராவின் நகங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் ஹேம்நாத்-க்கு எதிராக குற்றம் காட்டும் வகையிலான ஆதாரங்கள் இல்லை எனவும் மேலும் , சித்ரா தூக்கு போட்டு தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் என நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹேம்நாத்தின் ஜாமீன் வழக்கு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. 


வழக்கில் 60 நாட்கள் ஆகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததை கருத்தில் கொண்டு ஹேம்நாத்-க்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. மறு உத்தரவு வரும் வரை மதுரையில் அண்ணாநகர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.