“சச்சின் உள்ளிட்ட இந்திய பிரபலங்களின் மத்திய அரசு ஆதரவு டிவிட்டுக்கு பின்னால் 12 செல்வாக்கு மிக்கவர்கள் இருக்கிறார்கள்” என்று, மராட்டிய உள்துறை அமைச்சர் தடாலடியாகத் தெரிவித்துள்ளது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியின் எல்லைப் பகுதியில் விவசாயிகள் கடந்த 2 மாத்திற்கும் மேலாகத் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன், பாஜக தலைமையிலான மத்திய அரசு இதுவரை 11 சுற்றுப் பேச்சு வார்த்தை நடத்தியும், அதில் எந்தவிதமான சுமூகமான முடிவும் எட்டப்படவில்லை.

அதே நேரத்தில், டெல்லி விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பொது மக்களும், விவசாயிகளுக்கு தங்களது ஆதரவுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில் தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகி ரிஹானா, தனது டிவிட்டர் பக்கத்தில் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்தார். 

அவரைப் போலவே, உலக பருவ நிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் கிரேட்டா தன்பெர்க், தனது டிவிட்டர் பக்கத்தில் “இந்தியாவில் போராடி வரும் விவசாயிகளுடன் நாங்கள் இணைந்து நிற்கிறோம்” என்றும் வெளிப்படையாகவே அறிவித்து இருந்தார். 

இதன் காரணமாக, உலகம் முழுமைக்கும் இந்திய விவசாயிகளின் போராட்டம் கவனம் பெற்றது. இதனால், உலகின் பல்வேறு தரப்பினரும் இந்திய விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், “இந்தியா டுகெதர்” மெசேஜை பகிர்ந்த இந்திய கிரிக்கெட் பிரபலங்கள், “விவசாயிகள் போராட்டம் எங்கள் நாட்டுப் பிரச்சனை” என்று, பகிர்ந்து வந்தனர். 

குறிப்பாக, சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோஹித் சர்மா, ரஹானே, சுரேஷ் ரெய்னா, கவுதம் கம்பீர், ரவி சாஸ்திரி உள்ளிட்ட இந்திய கிரிக்கெட் பிரபலங்கள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ஆதரிப்பது போல் கருத்து கூறி, தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தனர். 

இந்திய கிரிக்கெட் பிரபலங்களின்  மத்திய அரசு ஆதரவு நிலைப்பாடு தொடர்பான கருத்து இணையத்தில் பெறும் விவாத பொருளாக மாறியது. இதனால், பலரும் இந்திய கிரிக்கெட் பிரபலங்களைக் கடுமையாக விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள்.

அத்துடன், “இந்திய கிரிக்கெட் பிரபலங்கள், விவசாயிகள் போராட்டத்தை எதிர்க்கிறார்களா?!” என்கிற கேள்வியையும், இணையத்தில் பலரும் எழுப்பியது வைரலானது. 

மேலும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், “சச்சின் டெண்டுல்கர் ஏதோவொன்று எதிர்பார்த்துத் தான் அரசுக்கு ஆதரவாக டிவீட் செய்கிறார். அவர் தனது மகன் அர்ஜுனை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தேர்வு செய்ய விரும்பினார். என்னைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னாவுக்கு தகுதியானவர் அல்ல. அவர் இந்த விருதுக்குத் தகுதியானவரா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்” என்றும் விமர்சனம் செய்திருந்தார். 

முக்கியமாக, நாட்டின் எந்த முக்கிய விவகாரங்களுக்கும் கருத்து தெரிவிக்காத சச்சின் டெண்டுல்கர், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்த பிரபலங்களைச் சாடி இருந்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் பின்பு, சச்சினுக்கு அதிருப்தியும் ஆதரவும் பரவலாக எழுந்தது. 

தொடர்ந்து, மராட்டிய நவநிர்மன் சேனா தலைவர் ராஜ் தாக்கரே பவார், “மத்திய அரசாங்கம் இந்த தவறை மீண்டும் செய்யக்கூடாது. லதா மங்கேஷ்கர், சச்சின் தெண்டுல்கர் பெரியவர்கள். ஆனால், மிகவும் எளிமையானவர்கள். டிவீட் செய்ய அரசாங்கம் கேட்டதன் காரணமாக அவர்கள் மக்கள் அனைவரும் மக்களின் கோபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது” என்று, குறிப்பிட்டிருந்தார். 

மேலும், “மத்திய அரசுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரபலங்கள் கருத்து வெளியிட பாஜக அழுத்தம் கொடுத்ததா?”  என்பதை அறிய, டிவீட் குறித்து போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று, காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. 

“சமூக ஊடகங்களில் இது போன்ற ஆதரவு தெரிவிப்பதற்காக, இந்த தேசிய ஹீரோக்கள் மீது பாஜக வின் அழுத்தம் இருந்ததா?” என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும். இந்த பிரபலங்களுக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்றும், கோரிக்கை எழுந்தது. 

இதனால், மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், இது தொடர்பாக விசாரணை நடத்த புலனாய்வுத் துறைக்கு உத்தரவு பிறப்பித்தார். 

இந்த நிலையில் தான், “சச்சின் தெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் விசாரிக்கப்படுவார்கள் என நான் ஒரு போதும் சொன்னதில்லை” என்று, உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தற்போது கூறி உள்ளார்.

இது தொடர்பாகப் பேசிய மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், “எங்கள் கடவுளைப் போலவே லதா மங்கேஷ்கரை நாங்கள் மதிக்கிறோம். சச்சின் நம் நாட்டில் உள்ள அனைவராலும் நேசிக்கப்படுபவர். அவர்களுக்கு எதிராக எந்த விசாரணையும் இல்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் டிவிட் செய்தார்களா? என்பதைப் பார்க்க பாஜக ஐடி செல் விசாரிக்கப்படும் என்று தான் நான் கூறினேன். 

மாநில புலனாய்வுத் துறை இந்த விசாரணையை மேற்கொண்டு வருகிறது. முதற்கட்ட விசாரணையில் பாஜக ஐடி விங் தலைவரின் பங்கு இருப்பதாக்க தற்போது தெரிய வந்திருக்கிறது. 

முக்கியமாக, இந்தியப் பிரபலங்களின் டிவீட்டுகளுக்குப் பின்னால் 12 செல்வாக்கு மிக்கவர்கள் இருக்கிறார்கள்” என்றும்,  மராட்டிய உள்துறை அமைச்சர் அனில் 
தேஷ்முக் தெரிவித்தார். தற்போது, இது வைரலாகி வருகிறது.