"அதிமுக ஆட்சியால் 50 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்ட தமிழகத்தின் நிலையை மாற்றி – தமிழக வளர்ச்சி - மக்களுக்கு முன்னேற்றம் தருவதே திமுகவின் இலக்கு’’ என்று மு.க ஸ்டாலின் தனது உரையை சமூக வலைதளத்தில் பதிவித்துட்டுள்ளார்.


வெற்றி நடை போடும் தமிழகம் - என்று விளம்பரம் கொடுக்கிறார் பழனிசாமி. இது வெற்றி நடை போடும் தமிழகம் அல்ல. வெத்து நடை போடும் தமிழகம். வளமான தமிழகம் என்று விளம்பரம் கொடுக்கிறார் பழனிசாமி. அது உண்மையில் அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு வளமான தமிழகம் தான். மற்றவர்களுக்கு தாழ்ந்த தமிழகம் தான்.


* 10 ஆண்டு காலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை.
* வேலை வாய்ப்பு இல்லை.
* புதிய முதலீடுகள் இல்லை.
* மாநில உரிமைகள் பறி போயிருக்கின்றன.
* நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற முடியவில்லை - இப்படி பெரிய விஷயங்களில் கவனம் செலுத்தவில்லை. அவர்களது அனைத்துக் கவனமும் ஊழலில் தான் இருந்தது.
* எல்லாத்துறைகளிலும் ஊழல் வந்துவிட்டது.
* ஊழல் மூலமாக பணம் அடிக்கும் திட்டங்களை மட்டுமே தீட்டினார்கள்.
* மாநிலத்தை 5 லட்சம் கோடி ரூபாய் கடனில் மூழ்க வைத்து விட்டார்கள்.
* இப்படி வகைதொகை இல்லாமல் கடன் வாங்கி, கொள்ளையடித்துவிட்டார்கள்.
* குடிமராமத்து பணி என்று கோடி கோடியாக கொள்ளையடித்து வருகிறார்கள். மண்ணை அள்ளுவதைப் போல பணத்தை அள்ளிவிட்டார்கள் - இப்படி தொடர்ச்சியாக அடுக்கிக் கொண்டே போகும் வகையில் தான் இந்த அ.தி.மு.க. ஆட்சி இருக்கிறது.


பெரிய பெரிய திட்டங்களைத் தான் செய்யவில்லை என்றால், ஒரு தொகுதிக்குத் தேவையான அவசிய தேவைகளைக்கூட இவர்கள் நிறைவேற்றவில்லை. இத்தகைய அவசிய, அவசரத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் 100 நாட்களில் உங்களது கோரிக்கைகளைத் தீர்ப்போம் என்ற உறுதிமொழியை நான் முன் வைத்துள்ளேன். இந்தக் கோரிக்கைகளை கழக அரசு அமைந்ததும் 100 நாளில் நாம் நிறைவேற்றுவோம். நிச்சயம் நிறைவேற்றுவோம்.


முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொல்வார்கள் - சொன்னதைச் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம் என்று! அவர் வழியில் நானும் சொன்னதைச் செய்வேன்! செய்வதைத் தான் சொல்வேன்!


தமிழகம் முழுவதும் வாங்கிய மக்களின் மனுக்களை சட்டரீதியா நிறைவேற்ற தமிழ்நாடு அரசில் தனித்துறை உருவாக்கப்படும். அந்த துறை, மாவட்ட ரீதியாக இந்த மனுக்களை பிரித்து பரிசீலித்து அதனை உடனடியாக நிறைவேற்றித் தரும் என்ற வாக்குறுதியை தமிழ்நாட்டு மக்களுக்கு நான் வழங்குகிறேன்.


தொகுதிவாரியாக - கிராம வாரியாக முகாம்கள் அமைத்து இப்பிரச்னைகள் குறித்து நேரடியாக விசாரணை நடத்தி நிறைவேற்றித் தருவோம். அதாவது அ.தி.மு.க. அரசாங்கம் செய்யத் தவறிய கடமையை – தி.மு.க. அரசாங்கம் நிச்சயம் செய்து கொடுக்கும்!


இந்தக் கடமையை தி.மு.க. அரசு நிறைவேற்றி முடிக்கும் போது தமிழகத்தில் சுமார் 1 கோடி குடும்பங்களின் கோரிக்கையாவது நிறைவேற்றப்பட்டு இருக்கும். 1 கோடி குடும்பங்கள் தங்களுக்கு ஏற்பட்ட கவலைகள், துன்ப துயரங்களில் இருந்து மீண்டிருப்பார்கள் என்று பேரறிஞர் அண்ணாவின் மீது ஆணையாக - தலைவர் கலைஞர் மீது ஆணையாக - தமிழ்நாட்டு மக்கள் மீது ஆணையாக - நான் உறுதியேற்றுள்ளேன்!


நீங்கள் என் மீது நம்பிக்கை வைத்து இங்கு வந்துள்ளீர்கள். கடந்த ஒரு மாதமாக 100 தொகுதிகளுக்கு மேல் நான் சென்று வந்துள்ளேன். நான் வருவது அறிந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து கோரிக்கை மனுக்களை கொடுத்துள்ளார்கள்.


என் மீது நம்பிக்கை வைத்து நீங்கள் மனு கொடுத்துள்ளீர்கள். ஆனால் பழனிசாமிக்கு இதைப் பார்த்தால் வயிற்றெரிச்சலாக இருக்கிறது. ஊர் ஊராகப் போய் புலம்பி வருகிறார்.


''ஸ்டாலின் காது குத்துகிறார்" என்று பழனிசாமி சொல்லி இருக்கிறார். ''ஆட்சிக்கு வந்ததும் 100 நாளில் பிரச்னையை தீர்ப்போம் என்று காது குத்துகிறார்" என்று பழனிசாமி பேசி இருக்கிறார். காது குத்த வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.


நான் இப்படி ஒரு திட்டத்தை அறிவித்ததும், நான் அறிவிக்கலாம் என்று இருந்தேன் - அதை தெரிந்து கொண்டு ஸ்டாலின் இப்படி அறிவித்துவிட்டார் என்று பழனிசாமி சொன்னார் அல்லவா? அது தான் ஒரே நாளில் கோடிக்கணக்கான மக்கள் காதில் குத்துவது ஆகும்?
அதை விட இன்னொரு பெரிய குத்து குத்தி இருக்கிறார் பழனிசாமி. அதாவது, தமிழ்நாட்டு மக்களின் எல்லா வாக்குறுதிகளையும் தான் நிறைவேற்றிவிட்டதாகச் சொன்னதைப் போல இமாலயப் பொய் வேறு எதுவும் இருக்க முடியாது.


2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை பழனிசாமிக்கு நான் நினைவூட்டுகிறேன்.


* இரண்டாவது விவசாய புரட்சித் திட்டம் கொண்டுவருவோம் என்று அறிவித்தீர்களே! வந்ததா? இல்லை!


* விவசாயிகளின் வருமானத்தை 2 அல்லது 3 மடங்கு உயர்த்துவோம் என்று அறிவித்தீர்களே? வருமானம் உயர்ந்ததா? இல்லை!


* எல்லா விவசாயக் கருவிகளையும் விவசாயிகளுக்கு இலவசமாகக் கொடுப்போம் என்று சொன்னீர்களே! கொடுத்தீர்களா? இல்லை!


* கரும்பு விலையைப் போல மற்ற விவசாயப் பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிப்போம் என்றீர்களே! நிர்ணயித்துவிட்டீர்களா? இல்லை!
* கரும்பு விவசாயிகளுக்கு தரவேண்டிய பணத்துக்கு பாக்கி வைக்க மாட்டோம் என்று சொன்னீர்களே? அப்படித்தான் இப்போது நடக்கிறதா?


* சொட்டு நீர் பாசனத்தை அரசு செலவில் அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாகச் செய்து கொடுப்போம் என்றீர்களே? செய்து கொடுத்துவிட்டீர்களா?


2016 ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.


* ரேசன் கார்டு வைத்திருப்பவர் அனைவருக்கும் செல்போன் இலவசம் என்றார்கள். கொடுத்தார்களா? இல்லை!


*கல்விக் கடன் அனைத்தும் ரத்தாகும் என்றார்கள். செய்தார்களா? இல்லை!


* இலவச லேப்டாப்புடன் இலவச நெட் இணைப்பு என்றார்கள். கொடுத்தார்களா?


* அம்மா பேங்கிங் கார்டு என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? இல்லை!


* பொது இடங்களில் இலவச வை-ஃபை என்றார்கள். தந்துவிட்டார்களா? 


* ரேசன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு கூட்டுறவு கைத்தறி அங்காடி கூப்பன் தருவோம் என்றார்கள். கொடுத்தார்களா?


* ஒரு லிட்டர் பால் 25 ரூபாய்க்கு தருவோம் என்றார்கள். தந்துவிட்டார்களா?
- இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாக பழனிசாமி சொல்லி இருக்கிறார்.


வாய்க்கு வந்ததை பேசுவது தான் அவரது வாடிக்கை. வாய்க்கு வந்ததை பேசுவது - நேரத்துக்கு தகுந்தமாதிரி நிறம் மாறுவது - ஆளுக்கு தகுந்தமாதிரி நடிப்பது தான் பழனிசாமிக்கு வாடிக்கை. அதனால் தான், என்னைப் பார்த்து காது குத்துகிறேன் என்கிறார்.


தன்னைப் போலவே மற்றவர்களும் இருப்பார்கள் என்று பழனிசாமி நினைக்கலாம். நான் வாக்குறுதியை நிறைவேற்றுவேன். நிறைவேற்ற முடியும் என்ற தைரியத்தில் தான் அதற்கான அத்தாட்சி சான்றிதழை நான் கொடுத்திருக்கிறேன். நிறைவேற்றாவிட்டால் என்னிடம் வந்து கேளுங்கள் என்று சொல்லி இருக்கிறேன். இது பழனிசாமியைப் போல ஏமாற்றிப் பிழைப்பவர்களுக்கு புரியாது.


அ.தி.மு.க. ஆட்சியால் அனைத்து துறையிலும் தமிழகத்தை 50 ஆண்டு காலத்திற்கு பின்னால் இழுத்துச் செல்லப்பட்டுள்ள நிலைமையை அடியோடு மாற்றி - இந்திய அளவில் தமிழகத்திற்கும் - தமிழக மக்களுக்கும் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும், பெருமையையும் தேடித் தர வேண்டும் என்பதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலக்கு. எனது இலக்கு.


ஊழலற்ற - ஒளிவு மறைவற்ற வெளிப்படையான - பெண்களுக்கு பாதுகாப்பான - சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் வகையில் - ஏழை, எளிய நடுத்தர மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்படும்.
புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவோம்! புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்! புதிய உட்கட்டமைப்பு திட்டங்கள் கொண்டு வருவோம். தொழிலாளர்கள், வணிகர்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என தனித்தனியாக அவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுப்போம்.


பெருந்தலைவர் காமராசர் காலத்து கல்வி வளத்தையும், பேரறிஞர் அண்ணா காலத்து மாநில உரிமையையும், முத்தமிழறிஞர் கலைஞர் காலத்து மக்கள் நலத் திட்டங்களையும் - உட்கட்டமைப்புத் திட்டங்களையும் தமிழகத்துக்கு வழங்கும் காலமாக எனது ஆட்சிக் காலம் அமையும்.


இது அண்ணாவின் மீது ஆணை! இது கலைஞர் மீது ஆணை! உங்கள் மீது ஆணை!  நன்றி! வணக்கம்!” என்றுள்ளார்.