எங்கே சென்றாலும், யாரை பார்த்தாலும் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்த ரசிகர்கள், நேற்று பிரதமர் மோடியின் கார் வரும் போது வலிமை அப்டேட் கேட்டு கூச்சலிட்டது பெரும் சலசலப்பை உண்டாக்கி உள்ளது. அதன் எதிரொலியாகவே தயாரிப்பாளர் போனி கபூர், தல அஜித் அடுத்தடுத்து அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

வலிமை படம் குறித்த அப்டேட்களை தல ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு நச்சரித்து வந்த நிலையில், அதை எல்லாம் கவனித்து வந்த நடிகர் அஜித் ரொம்பவே அப்செட்டாகி உள்ளார். சமீபத்தில் தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரம் செய்த போது அவரிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்டனர். மேலும், கிரிக்கெட் வீரர்களிடம் அப்டேட் கேட்டது. எல்லாத்தையும் தாண்டி பிரதமர் மோடியிடமே அப்டேட் கேட்டது அஜித்தை ரொம்பவே அப்செட் ஆக்கி உள்ளது.

இதை அறிந்த தயாரிப்பாளர் போனி கபூர், ரசிகர்களை சாந்தப்படுத்தும் விதமாக இன்று அதிகாரப்பூர்வமாக ஒரு ட்வீட்டை வெளியிட்டு இருந்தார். விரைவில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் எனவும், ரசிகர்களின் ஆர்வத்தை நாங்கள் மதிக்கிறோம் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது தனது மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலம் தனது ரசிகர்களை கண்ணியம் காக்க சொல்லி தல அஜித்தே பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. எந்த அழுத்தம் காரணமாக இப்படி அஜித் அறிக்கை வெளியிட்டுள்ளார் என்றும் தெரியவில்லை.

என் மீதும் என் படங்களின் மீதும் அபரிமிதமான அன்பு கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட்ஸ் கேட்டு..

அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்யும் செயல்கள் என்னை வருத்தமுற செய்கிறது. முன்னரே அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை, நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும்.

உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில், நான் எடுக்கும் முடிவுகள், என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம் மீது உள்ள மரியாதையை கூட்டும். இதை மனதில் வைத்துக் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும்,

சமூக வலைதளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன். நன்றி, என்றும் அன்புடன் அஜித் குமார் என கையெழுத்தையும் போட்டு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

தல அஜித்தின் வார்த்தையை மீறி இப்படி வலிமை அப்டேட்டை பல இடங்களிலும் கேட்டு தொல்லை செய்பவர்கள் தனது ரசிகர்களே இல்லை என்கிற தொனியிலேயே இந்த அறிக்கையை அஜித் வெளியிட்டுள்ளார். இனிமேலாவது அஜித் ரசிகர்கள் அப்டேட் அலப்பறையை நிறுத்துவார்களா என்று பார்ப்போம்.