கணவன் - மனைவியைப் பிரித்து வைத்த சாமியாரை, ஆத்திரம் தாங்காமல் அவர் இடத்திற்கே சென்று கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த 56 வயதான ராஜேந்திரன், அந்த பகுதியில் இருக்கும் அங்காள பரமேஸ்வரி கோயிலில் தினமும் அருள் வாக்கு சொல்லி வந்தார். இதனால், அவர் அந்த பகுதி பெண் பக்தர்களின் நம்பிக்கையைப் பெற்று வந்தார். இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பலரும், இவரிடம் அருள் வாக்கு கேட்டுச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கோயிலின் அருகில் 38 வயதான திருமலை என்பவர், தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்த திருமலை, குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அத்துடன், குடித்துவிட்டு வீட்டிற்கு வரும் திருமலை, மனைவியிடம் அன்றாடம் சண்டை போடுவதை வாடிக்கையாகச் செய்து வந்தார் என்றும் கூறப்படுகிறது.

இதனால், குடிப்பழக்கத்துக்கு அடிமையான கணவன் திருமலை அன்றாடம் வீட்டில் பிரச்சனை செய்து வந்ததால், பொறுமை இழந்த அவரது மனைவி, கணவனிடம் சண்டை போட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். அதன் பிறகு, அவர் வீடு திரும்பவே இல்லை.

இதனைச் சற்றும் எதிர்பார்க்காத கணவன் திருமலை, தனது மனைவியைப் பல இடங்களில் தேடிப் பார்த்திருக்கிறார். எங்குத் தேடியும் அவர் மனைவி கிடைக்காத நிலையில், தனது மனைவிக்கு அங்காள பரமேஸ்வரி கோயிலில் தினமும் அருள் வாக்கு சொல்லி வந்த 56 வயதான ராஜேந்திரன் தான், ஆலோனை வழங்கி கணவன் - மனைவியைப் பிரித்து வைத்துவிட்டார் என்று, அவரிடம் யாரோ ஒருவர் கூறியதாகத் தெரிகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த திருமலை, நேராக அருள் வாக்கு சொல்லும் ராஜேந்திரனைத் தேடி அங்காள பரமேஸ்வரி கோயில் வளாகத்தில் வந்து உள்ளார். 

அப்போது, ராஜேந்திரன் அங்கு சக பக்தர்களுக்கும் அருள் வாக்கு சொல்லிக்கொண்டு இருந்து உள்ளார். அந்த நேரம் பார்த்து, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, ராஜேந்திரனை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார். 

இதில், படுகாயமடைந்த ராஜேந்திரன் ரத்த வெள்ளத்தில் அங்கேயே சரிந்து விழுந்தார். இதனைப் பார்த்துப் பதறிப்போன அங்கு நின்ற சக பக்தர்களும், அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இதனையடுத்து, கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராஜேந்திரன், தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 

இது தொடர்பாகத் திருமலை மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை தீவிரமா தேடி வந்த நிலையில், தற்போது அவர் இருக்கும் இடம் தெரிந்து அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.