16 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டிய இளைஞன் மீது போக்சோ சட்டம் பாய்ந்து உள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் உள்ள கோட்டைமேடு பகுதியில் உள்ள சுபாஷ் நகரில் 28 வயதான கோகுல் என்ற இளைஞர் வசித்து வருகிறார். 

இவர் வேலைக்கு செல்லாமல் அப்பகுதியில் ஊர் சுற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், அதே பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். 

அந்த சிறுமி, பள்ளிக்கூடம் சென்று வரும்போதெல்லாம், அந்த சிறுமியை வழி மறித்து, “என்னைத் திருமணம் செய்துகொள்” என்று, அந்த சிறுமியை கோகுல் தொடர்ந்து வற்புறுத்தி வந்தார் என்று கூறப்படுகிறது. 

அத்துடன் தன்னை திருமணம் செய்துகொள்ளச் சொல்லி, அந்த சிறுமிக்கு கோகுல் தொடர்ந்து கொலை மிரட்டலும் விடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது.

இதனால், பயந்து போன அந்த சிறுமி, கோகுலின் காதல் டார்ச்சர் குறித்து, தனது வீட்டில் கூறி உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அவரின் உறவினர்கள், அங்குள்ள கமுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் வழங்குப் பதிவு செய்த காவல் துறையினர், ஒரு தலை காதலன் கோகுலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், சிறுமியை அவர் காதல் டார்ச்சர் செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரிடம் வாக்கு மூலம் பெற்ற போலீசார், அந்த ஒரு தலை காதலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, அவனை நீதிமன்றத்தில் முன்னிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த கோட்டமேடு கருக்கல்வாடி பகுதியில், ஆசை வார்த்தை கூறி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய 23 வயது ராஜசேகர் என்ற இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.