தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருவது மீண்டும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், கடந்த சில மாதங்களாக ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தன. அதே சமயம், உலகின் சில நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று 2 ஆம் அலையாக வீசிக்கொண்டும் இருந்தது. ஆனால், தமிழகம் உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லாமல் காணப்பட்டன.

இதன் காரணமாக, தமிழகம் உட்பட இந்தியாவின் பல இடங்களிலும் இயல்பு நிலை மெல்ல திரும்பிக்கொண்டு இருந்தது. இதனால், பொது மக்களுக்கு பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்ட நிலையில், கல்லூரி மற்றும் 9 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டன.

இவற்றுடன் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு நின்று களம் இறங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசியல் பொதுக் கூட்டங்களும் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன.

இப்படியான சூழ்நிலையில் தான், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 585 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. 

இந்த பரிசோதனையில் 287 ஆண்கள், 194 பெண்கள் என மொத்தம் 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. அந்த வகையில் கடந்த 3 நாட்களாக  கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் சற்று உயர்ந்திருக்கிறது.

இதில், அதிக பட்சமாகச் சென்னையில் 180 பேர் உள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் 48 பேரும், செங்கல்பட்டில் 49 பேரும், திருவள்ளூரில் 37 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

குறிப்பாக, இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் சேர்த்து மொத்தம் 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று ஒரே நாளில் உயிரிழந்து உள்ளனர். 

மேலும், தமிழகத்தில் 38 வது நாளாக நேற்றைய தினம் 726 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில், நேற்று ஒரே நாளில் மட்டும் 16 ஆயிரத்து 73 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இவர்களில், 10 ஆயிரத்து 428 பேர் முதல் முறையாகவும், 5 ஆயிரத்து 588 பேர் 2 வது முறையாகவும் தடுப்பூசி  போட்டுக்கொண்டவர்கள் ஆவர். 

அதே போல், தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 45 ஆயிரத்து 242 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டு உள்ளனர். 

தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி உள்ள நிலையில், நாங்குநேரி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் குருநாதன் தலைமையில், சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் போலீசார் உள்ளிட்ட குழுவினர் நேற்று பரப்பாடி மெயின் பஜாரில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது, முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். அப்போது, “பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்” என்றும், அவர்கள் அறிவுறுத்தினர்.