கே.ஜி.எஃப் படங்களைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் சலார். கே.ஜி.எஃப் படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது. பிரபாஸ் நாயகனாக நடித்து வரும் இந்தப் படத்தின் பூஜை ஹைதராபாத்தில் நடைபெற்றது.

இதில் பிரபாஸுக்கு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளார். இன்னும் அவருடைய காட்சிகளின் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. தற்போது சலார் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

2022-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி சலார் வெளியாகும் என அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறை தினங்களை மனதில் வைத்து இந்த வெளியீட்டுத் தேதியைத் தேர்வு செய்துள்ளது படக்குழு. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் சலார் வெளியாகவுள்ளது.

கே.ஜி.எஃப் படங்களில் பணிபுரிந்த தொழில்நுட்பக் கலைஞர்களே, சலார் படத்திலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

பிரபாஸ் கைவசம் ராதே ஷ்யாம் படம் உள்ளது. ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நடித்துள்ளார் பிரபாஸ். அவரது 20ஆவது படமான இந்தப் படத்தை, யு.வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதில், பிரபாஸிற்கு ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். ராதே ஷ்யாம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே தெலுங்கு சினிமாத் துறையில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.