மனைவியை கொலை செய்ய முயன்ற கணவனை, மண்ணெண்ணெய் ஊற்றி மனைவியே எரித்துக் கொன்ற சம்பவம் பரரபப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அருகே உள்ள முனுசுவலசை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி முனியசாமி, தனது மனைவி மல்லிகா உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்குக் குழந்தை ஒன்றும் உள்ளது. 

இப்படியான சூழ்நிலையில், மதுவுக்கு அடிமையான கணவன் முனியசாமி, அடிக்கடி குடித்துவிட்டு மனைவியைத் துன்புறுத்தியதாகவும், குழந்தையையும் அடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவர் மனைவி மல்லிகா, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, கணவனைத் திருப்பித் தாக்க முற்பட்டதாகத் தெரிகிறது.

இதனால், கடும் ஆத்திரமடைந்த கணவன் முனியசாமி, நேற்றைய தினம் தனது மனைவியைக் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்று உள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவர் மனைவி மல்லிகா, அப்போதைக்கு அந்த சண்டையைச் சமாளித்து விட்டு, கணவனையும் இனியும் விட்டு வைக்க முடியாது என்று தீர்மானத்திற்கு வந்துள்ளார்.

அதன் படி, இரவு கணவன் முனியசாமி நன்றாகத் தூங்கும்போது, வீட்டுக்கூரையின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி அவர் மனைவி எரித்து உள்ளார். இதில், கணவன்  முனியசாமி, தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.

இதனையடுத்து, அங்கிருந்த தப்பிச் சென்ற அவர் மனைவி மல்லிகா, அந்த பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தனது பிள்ளையுடன் சென்று தங்கி இருந்து உள்ளார்.

அப்போது, மல்லிகா வீட்டில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதியில் உள்ள கேணிக்கரை காவல் துறையினருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் தகவல் கூறி உள்ளனர். 

இது  தொடர்பாக அங்கு விரைந்து வந்த போலீசார், அந்த உடலை மீட்டு அங்குள்ள ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உயிரிழந்த முனியசாமியின் மனைவி மல்லிகாவிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில், “எனது கணவர், தன்னை தினமும் துன்புறுத்தி வந்தார் என்றும். அடிக்கடி குடித்துவிட்டு என்னையும் என் குழந்தையையும் தொடர்ச்சியாக அடித்ததாகவும், அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் என்னை அவர் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றதாகவும், இதனால் இரவு முனியசாமி தூங்கும்போது வீட்டுக்கூரையின் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி அவரை எரித்துவிட்டதாகவும்” தெரிவித்து உள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், கணவனை எரித்து கொலை செய்ய வேறு எதாவது காரணம் இருக்கிறதா என்ற கோணத்திலும் போலீசார் மல்லிகாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும்,  பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.