ஃபேஸ்புக் காதலால், இளம் பெண்ணின் திருமணத்தை நிறுத்திய காதலன், பெண்ணின் தந்தையிடம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமூக வலைத்தளங்களில் பழக மிரட்டி பணம் பறிக்கும் வடநாட்டுக் கலாச்சாரம் தற்போது தமிழகத்திலும் உட்புகுந்து கொண்டது. தமிழகத்தில், அதுவும் நம்ம மதுரையில் தான், இப்படி ஒரு மிரட்டல் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர், சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்ற இளைஞருடன்  ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகிப் பழகி வந்திருக்கிறார்.

அவர்களுடனான இந்த முகம் தெரியாத பேஸ்புக் பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறி உள்ளது. இதனால், ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கி உள்ளனர்.

இந்த நிலையில், காதலன் கண்ணன் அடிக்கடி ஜெய்ஹிந்துபுரம் வந்து இளம் பெண்ணை சந்தித்துப் பேசுவதும், அதன் தொடர்ச்சியாக அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பகுதியின் பல இடங்களுக்குச் சென்று ஊர் சுற்றிவிட்டு, இருவரம் ஒன்றாகச் சேர்ந்து புகைப்படங்களும் எடுத்து எடுத்துக்கொண்டு உள்ளனர். இப்படியாக, சில நாட்கள் அவர்கள் காதலர்களாக ஊர் சுற்றி வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், அந்த இளம் பெண்ணிற்கும் காதலன் கண்ணனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது. அத்துடன், காதலன் கண்ணனின் செயல்பாடுகளில் பல மாற்றங்களை அந்த இளம் பெண் கண்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அந்த பெண் காதலன் கண்ணனுடன் பேசாமல் தவிர்த்து வந்ததோடு, அவரை விட்டு விலகியும் சென்று உள்ளார்.

இப்படியான சூழ்நிலையில் தான், அந்த இளம் பெண்ணிற்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்து வந்து உள்ளனர்.

தனது முன்னாள் காதலிக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதைத் தெரிந்து கொண்ட முன்னாள் காதலன் கண்ணன், ஃபேஸ்புக்கில் போலியான ஒரு பக்கத்தை உருவாக்கி, அந்த இளம் பெண்ணுடன் தான் எடுத்துக்கொண்ட போட்டோக்களை பதிவிட்டு உள்ளார்.

முக்கியமாக இந்த புகைப்படங்களை எல்லாம், அந்த பெண்ணை கல்யாணம் செய்ய இருந்த மணமகனுக்கும் அனுப்பி வைத்திருக்கிறார். இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த மாப்பிள்ளை, பெண் வீட்டாரிடம் இந்த போட்டோக்களை காட்டி, அவர் விளக்கமும் கேட்டு உள்ளார். அத்துடன், நடைபெற இருந்த  திருமணத்தையும் அப்படியே நிறுத்தி விட்டார். 

இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான பெண் வீட்டார், இது தொடர்பாக முன்னாள் காதலன் கண்ணனிடம் கேட்டதற்கு, பெண்ணின் தந்தையை தன்னிடம் பேசும் படி கூறியிருக்கிறார். அதன்படி, அவரும் கண்ணனிடம் பேசியிருக்கிறார். அப்போது, எதிர்முனையில் பேசிய கணவன், “இந்த ஆதரங்களை எல்லாம் காட்டாமல் இருக்க லட்சக்கணக்கில் பணம் கேட்டு” மிரட்டியதாகத் தெரிகிறது. 

மேலும், “பணம் தந்தால் மட்டுமே இந்த புகைப்படங்களை எல்லாம் சமூக வலைத்தளத்தில் இருந்து நான் நீக்குவேன்” என்றும், அவர் கூறியதாகத் தெரிகிறது.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை மற்றும் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஆகியோர், மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்காவிற்கு புகார் தெரிவித்தனர். 

இந்த நிலையில், ஜெய்ஹிந்துபுரம் காவல் ஆய்வாளர் சேது மணி மாதவன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு 
செய்த தனிப்படை போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் அடுத்த 2 மணி நேரத்தில் மதுரையில் பதுங்கியிருந்த கண்ணனை போலீசார் அதிரடியாக  
கைது செய்தனர். இதனையடுத்து, அவரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.