எதார்த்தமான நகைச்சுவை உணர்வால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் தொலைக்காட்சி பிரபலம் புகழ். தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு அனைவரையும் சிரிக்க வைக்கும் இவரது பேச்சு ரசிகர்களுக்கு ஃபேவரைட். பல்வேறு நிகழ்ச்சிகளில் இவர் தோன்றியிருந்தாலும் சமீபத்தில் வெளியான குக் வித் கோமாளி நிகழ்ச்சி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இரண்டாவது சீசனில் கோமாளிகளாக புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக் கொண்ட நிலையில், போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை கலகலப்பாக்குவதில் கோமாளிகளின் பங்கு அதிகம். அதனால் கோமாளிகளுக்கு என தனித்தனி ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றன.

குறிப்பாக புகழும் சிவாங்கியும் அண்ணன் - தங்கையாக செய்யும் அட்ராசிட்டிகள் ரசிகர்களிடம் ஏக போக வரவேற்பைப் பெற்று வருகின்றன. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த புகழ் தனது திறமையாலும், தன்னம்பிக்கையாலும் இன்று தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது புத்தம் புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கும் புகழ், அந்த மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் ‘கார் கிளீனர் டூ கார் ஓனர்’ இதல்லவா வளர்ச்சி என புகழை பாராட்டி வருகின்றனர்.

தல அஜித் நடிக்க H.வினோத் இயக்கி வரும் வலிமை படத்தில் முக்கிய ரோலில் புகழ் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருவதை காண முடிகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.