17 வயது சிறுமியிடம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், அத்து மீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் செயல்பட்டு வரும் இலங்கை அகதிகள் முகாமில் சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாசித்து வருகின்றனர். 

இங்கு, அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான தன்ராஜ் என்ற இளைஞர், அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, இந்த தன்ராஜ் என்ற இளைஞருக்கும் ராமநாதபுரம் மண்டபம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த 20 வயதான துர்கா என்ற இளம் பெண்ணிற்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து, இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

அதன் தொடர்ச்சியாக, கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தன்ராஜ் மனைவி துர்கா, கணவனை விட்டுப் பிரிந்து ராமநாதபுரத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் கடந்த ஒரு ஆண்டு காலமாகத் தனது இரு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். 

இப்படியான சூழ்நிலையில், கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில், தனது மனைவியைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த கணவன் தன்ராஜ், நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியிடம் அத்து மீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த அச்சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் கூறி அழுதிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி, புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், இளைஞர் தன்ராஜை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 

இந்த விசாரணையில், அவர் சிறுமியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இளைஞர் தன்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவரை போலீசார் கைது செய்தனர். 

மேலும், கைது செய்யப்பட்ட தன்ராஜை, கும்மிடிப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார, அதன் பிறகு அவரை சிறையில் அடைத்தனர். இதனால், அந்தபகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் டவுன் பழைய காவல் நிலைய லைன் தெருவில் வசித்து வரும் 66 வயதான பூங்கோதை, நேற்று அதே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக இரு சக்கரவாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வேகமாக வந்த மர்ம நபர்கள், அந்த பெண் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க ஜெயினை பறித்துக்கொண்டு வேகமாகத் தப்பிச் சென்று விட்டனர். இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட அந்த பெண், செங்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.