கடந்த மார்ச் மாதத்தில் முதல்வர் பழனிசாமி விழாவொன்றில் பேசும்போது, ``தென் மாவட்ட மக்களுக்கு உயர்தர சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த எய்ம்ஸ் திட்டத்தை அதிமுக அரசு செயல்படுத்தி உள்ளது. எத்தனையோ நகரங்கள் இருந்தும் மதுரையிலேயே எய்ம்ஸ் அமைகிறது. மதுரை அதிர்ஷ்டமான நகரம்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். டெல்லி எய்ம்ஸ்ல் உள்ள அனைத்து வசதிகளும் மதுரையில் வர உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வர உள்ளது.

மதுரை மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும். சாலை வசதி வேண்டி கோரிக்கை விடுத்தீர்கள். முன்பு சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தது. தற்போது தாமான சாலை அமைத்து போக்குவரத்து நெரிசல் இன்றி உள்ளது" என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம்.கடோச் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என 2015-இல் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, 2018-இல் மதுரை தோப்பூரில் இடம் தோ்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ. 1,264 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. 

இந்நிலையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம்.கடோச்-ஐ நியமித்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது. இவர் தற்போது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக இருந்து வருகிறார். 

மேலும், டாக்டர் சுதா சேஷய்யன்-எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், மத்திய சுகாதாரத் துறையின் இயக்குனர் ஜெனரல் மற்றும் கூடுதல் செயலர், தமிழக அரசின் தலைமைச் செயலர், டாக்டர் சண்முகம் சுப்பையா - கே.எம்.சி. மருத்துவக் கல்லூரியின் தலைமை பேராசிரியர் உள்ளிட்டோர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளில் முதன்மையானது, மதுரை எய்ம்ஸில் எந்த முன்னெடுப்பும் எடுக்கப்படாமல் இருக்கிறது என்பதுதான். இதுபற்றி அவர் அப்போது பேசும்போது, ``பொய்களின் கூடாரமாக பழனிசாமி மாறிவிட்டார் என்பதற்கு உதாரணம் அவரின் சாதனைகள் குறித்த அறிக்கை. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்ததாக பழனிசாமி சொல்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பெயர்ப் பலகை மட்டும்தான் வைத்துள்ளார்கள். பணமே ஒதுக்கவில்லை.

மோடி ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக இதுவரை தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக வந்த பிரதமர் மோடி, கண்துடைப்புக்காக ஒரு கல்வெட்டைத் திறந்து வைத்துவிட்டுப் போனார். அதன்பிறகு எதுவும் நடக்கவில்லை. 2015-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் அறிவித்தது முதல் கடந்த ஐந்தாண்டு காலமாக எய்ம்ஸ் நாடகங்கள் தான் நடந்துள்ளதே தவிர, எய்ம்ஸ் மருத்துவமனை வந்தபாடில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையைக் கொண்டு வந்துவிட்டதாகச் சொல்வது எடப்பாடியின் பொய்" என்று கடுமையாக சாடியிருந்தார் அவர்.

இந்நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.