“மு.க. ஸ்டாலின் எப்போதுமே முதலமைச்சராக முடியாது” என்று, ஆதரவாளர்கள் மத்தியில் அவரது அண்ணன் மு.க‌.அழகிரி கடுமையாகத் தாக்கி பேசி உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி, “வருகிற சட்டமன்ற தேர்தலில் தனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்” என்று, தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். அத்துடன், இது தொடர்பாக தன்னுடைய ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், அவர் கூறி வந்தனர்.

இந்த நிலையில் தான், மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் புதிய கட்சி குறித்து மற்றும் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை மதுரை மாவட்டம் பாண்டிகோவிலில் இருக்கும் தனியார் மண்டபத்தில் நடத்தினர். 

அப்போது, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மு.க. அழகிரி, “சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்தக் கூட்டம்” என்று, சூளுரைத்தார். 

“கருணாநிதி, அன்பழகனுக்கு தெரியாமல் என்னை திமுகவில் இருந்து நீக்கினர். எந்த ஒரு பதவிக்கும் நான் ஆசைப்படவில்லை” என்று குறிப்பிட்ட மு.க. அழகிரி, “கருணாநிதியிடம் என்னை பற்றி பொய்களை கூறி கட்சியை விட்டு நீக்க வைத்தனர்” என்றும், அவர் கூறினார்.

“திமுகவுக்கு ஒரு சாதாரண தொண்டனாக நான் பணியாற்றினேன் என்றும், பதவியை எதிர்பார்த்து என்றுமே திமுகவில் நான் இருந்ததில்லை” என்றும், மு.க. அழகிரி தெரிவித்தார்.

“உடல் நிலை சரியில்லாத கருணாநிதியை கட்டாயப்படுத்தி திருவாரூரில் போட்டியிடச் செய்தனர் என்றும், ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவியை வாங்கித் தந்ததே நான்தான் என்றும், ஸ்டாலின் ஏன் எனக்கு துரோகம் செய்தார் என்று எனக்கு இதுவரை தெரியவில்லை” என்றும், அவர் குறிப்பிட்டார். 

“மு.க.ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவியை என்னிடம் கேட்டுத்தான் கருணாநிதி அளித்தார் என்றும், கருணாநிதியிடம் நான் எம்.பி. பதவியோ, அமைச்சர் பதவியோ ஒருபோதும் கேட்கவில்லை என்றும், அவராகவே அதை எனக்கு கொடுத்தார்” என்றும், மு.க. அழகிரி சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “மு.க. ஸ்டாலினால் ஒரு போதும் முதலமைச்சராக முடியாது என்றும், எனது ஆதரவாளர்கள் விட மாட்டார்கள்” என்றும், மு.க. அழகிரி ஆவேசமாகப் பேசினார்.

“திருமங்கலம் இடைத்தேர்தல் சிறப்பாக பணியாற்றி வெற்றி பெற்றோம். உலகமே திருமங்கலம் இடைத்தேர்தலை உற்று நோக்கியது. திருமங்கலம் பார்முலா 
என்பது எங்களது கடினமான உழைப்பு. திருமங்கலம் தேர்தலில் திமுக வெற்றிக்குக் கலைஞரின் கடின உழைப்பு மட்டுமே பார்முலா வேறில்லை. 

திருமங்கலத்தில் பணம் கொடுத்து வென்றதாகக் கூறினார்கள். ஆனால், கடும் உழைப்பால் தான் அந்த வெற்றியை நாங்கள் காட்டினோம்” என்றும், நினைவுபடுத்தினார். 

“திருமங்கலம் தேர்தலில் ஜெயிக்க தவறி இருந்தால், திமுக ஆட்சியே அப்போது கையை விட்டு போயிருக்கும் என்றும், திருமங்கலம் தேர்தல் என்றாலே இந்தியாவே திரும்பி பார்க்கிறது. பயம் என்றால், நீங்கள் நினைப்பது போல் அல்ல, 40,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்றும், அவர் குறிப்பிட்டு பேசினார்.

அதே போல், திமுகவில் இருந்து வைகோ வெளியேறிய போது, ஒருவர் கூட கட்சியை விட்டு வெளியேற வில்லை என்றும், பேராசிரியர் அன்பழகனுக்கு தெரியாமல் என்னை கட்சியில் இருந்து நீக்கினர்” என்பதையும், அவர் மீண்டும் நினைவுபடுத்தினார்.

முக்கியமாக, “எம்.ஜி.ஆரின் கோட்டையாக இருந்த மதுரையை, திமுகவின் கோட்டையாக மாற்றியது நான் தான் என்றும், இப்போதும் நான் உங்களில் ஒருவன், மதுரை நமது கோட்டை இதை யாராலும் மாற்ற முடியாது” என்றும், அவர் சூளுரைத்தார்.

இதனிடையே, தி.மு.க. கட்சியிலிருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டு தற்போது வரை சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.