ஃபேஸ்புக் மூலமாக செல்போன் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களைப் பாதி விலைக்கு விற்பதாகக் கூறி 50 க்கும் மேற்பட்டவர்களை இளம் காதல் ஜோடிகள் ஏமாற்றி சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை அடையாறு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிலர் ஒன்று சேர்ந்து புகார் அளித்தனர். அத்துடன், அது தொடர்பான புகார்கள் தொடர்ந்து வரவே, வழக்குப் பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

அந்த புகார் என்னவென்றால், “விலை உயர்ந்த புதிய செல்போன்களை பாதி விலைக்குத் தருவதாகக் கூறி, ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கில் பணம் பறிக்கப்பட்டதாக” பாதிக்கப்பட்டவர்கள் அடையாறு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த வழக்கில், முதலில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பயன்படுத்திய ஃபேஸ்புக் கணக்கு, கூகுள் பே எண் மற்றும் செல்போன் எண்களை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதில், சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு எண், பம்மலைச் சேர்ந்த 21 வயதேயான நளினி என்ற இளம் பெண்ணுடையது என்பதனை போலீசார் முதலில் கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து, அடையாறு சைபர் கிரைம் போலீசார், நேராக நளினி வீட்டிற்குச் சென்று, அவரை பிடித்து விசாரித்து உள்ளனர். அந்த விசாரணையில், நளினியின் காதலர் குரோம்பேட்டையை அடுத்து உள்ள நெமிலிச்சேரியைச் சேர்ந்த 23 வயதான அரவிந்த், இந்த மோசடிக்கு பின்புலமாக இருந்தது தெரிய வந்தது.

அதன் தொடர்ச்சியாக, இந்த விசாரணை அரவிந்த் பக்கம் திரும்பியது. பின்னர் அரவிந்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் கேட்டரிங் படிப்பில் டிப்ளமா படித்து இருந்ததும், குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிப்பதற்காக ஃபேஸ்புக் மூலமாக மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. 

மேலும, “சென்னை கஸ்டம்ஸில் தனக்கு தெரிந்த நபர்கள் பணி புரிவதாகவும் அவர்களின் மூலம் வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விலை உயர்ந்த செல்போன்களை பாதி விலைக்கு விற்பாவதாகவும், ஃபேஸ்புக் மூலமாக இந்தக் காதல் ஜோடி புதிய வகையில் விளம்பரம் செய்து, புது விதமாக மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

இவற்றுடன், ஃபேஸ்புக்கில் மிகவும் விலை உயர்ந்த செல்போன்களின் படங்களைப் பதிவிட்டு பலருக்கும் ஆசைகாட்டி, சிலரை மோசடி வலையில் வீழ்த்தியதும் தெரிய வந்தது. 

அத்துடன், விலை உயர்ந்த செல்போன்களின் படங்களைக் காட்டி வாடிக்கையாளர் ஏமாற்றி பணம் பறித்து உள்ளனர். அத்துடன், அந்த பணத்தை எல்லாம், கூகுள் பே, போன் பே கணக்குகளில் அனுப்பும்படி அவர்கள் கூறி பெற்றுக்கொண்டு உள்ளனர். 

அந்த கூகுள் பே மற்றும் போன் பே கணக்குகள் யாவும், இளம் பெண் நளினியின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்த நிலையில், மோசடியில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியை போலீசார் தற்போது கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவற்றுடன், கைது செய்யப்பட்ட காதல் ஜோடியிடம் இருந்து ஏடிஎம் கார்டுகள், மோசடி செய்ய பயன்படுத்தப்பட்ட சிம் கார்டுகள், செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்து உள்ளனர்.