முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை காலை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ள நிலையில், திமுக வில் தற்காலிக சபாநாயகர் யார்? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11.30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் முதன் முறையாகக் கூடுகிறது. 

தமிழகத்தின் புதிய முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், 33 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டர். பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

அதன் படி, நாளை தினம் தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. அத்துடன், முழு ஊரடங்கை முறையாக அமல்படுத்துவது குறித்தும், இன்னும் பிற பிரச்சனைகள் குறித்தும் இதில் ஆலோசனை நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது. 

அதன் தொடர்ச்சியாக 16 வது சட்டமன்ற பேரவையில் முதல் கூட்டத்தொடர் வரும் 11 ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 10 மணிக்கு சென்னை கலைவானர் அரங்கத்தில் நடைபெறும் என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அப்போது தற்காலிக சபாநாயகர் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் என்றும் கூறப்படுகிறது. 

அதன் படி, தற்காலிக சபாநாயகராக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா இருப்பார் என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், தற்போது கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏ கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அன்றைய தினம் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பதவிப்பிரமாணம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, தேர்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை உறுப்பினர்கள் கட்டாயம் கொண்டுவர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மேலும், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவருக்கான தேர்தல்கள் மே 12 ஆம் தேதி நடைபெறும் என்றும், அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

எனினும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று இன்னமும் அக்கட்சியினர் முடிவு செய்யாமல் இருக்கிறார்கள். இது தொடர்பாக அதிமுகவில் ஓபிஎஸ் - எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டதால், யார் எதிர்க்கட்சித் தலைவராகப் போகிறார்கள் என்பதில் குழப்பமே நீடிக்கிறது. இது தொடர்பாக வரும் திங்கள் அன்று ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்படும் என்றும், அந்த கட்சி அறிவித்துள்ளது.