தமிழக அமைச்சரவையின் சுவாரஸ்யமான தகவல்கள் நிறைய இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை மட்டும் இப்போது பார்க்கலாம்..

தமிழகத்தில் நடந்து முடிந்த 16 வது சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் கைப்பற்றி அமோக வெற்றிபெற்றுக் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ஆட்சி பிடித்துள்ளது. 

அதன் படி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். அவரை தொடர்ந்து, அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 33 உறுப்பினர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

தற்போது புதிதாக அமைந்துள்ள தமிழக அமைச்சரவையின் சுவாரஸ்யமான விசயங்கள் என்னவென்றால், “தமிழக அரசியல் வரலாற்றில், ஆளும் கட்சியில் முதலமைச்சருக்கு அடுத்து அந்த கட்சியில் முக்கிய முக்கிய அல்லது மூத்த தலைவரோ அவருக்கு தான் நிதி அமைச்சர் பொறுப்பு இது வரை வழங்கப்பட்டு இருந்திருக்கிறது. ஆனால், இந்த முறை திமுக ஆட்சியில் அந்த வழக்கம் அதிரடியாக மாற்றப்பட்டு இருக்கிறது. 

அதன் படி, தமிழக அமைச்சரவையில் மூத்த உறுப்பினராக இருக்கும் திமுக பொது செயலாளர் துரைமுருகனுக்கு, நீர்வளத்துறை வழங்கப்பட்டு இருக்கிறது. 

அதே போல், நிதி அமைச்சர் பதவியானது, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கு இந்த முறை வழங்கப்பட்டு இருக்கிறது. 

மதுரை மத்திய தொகுதியிலிருந்து 2 வது முறையாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ள பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், பாரம்பரியம் கொண்ட அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவர். இவருடைய தாத்தா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த பி.டி.ராஜன் இவர். அப்பா பழனிவேல் ராஜன், தமிழக சட்டப்பேரவை சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்திருக்கிறார். 

சட்டமன்ற உறுப்பினராக 2 வது முறை தேர்ந்தெடுக்கப்பட்டு பழனிவேல் தியாகராஜன், நிதி மற்றும் நிர்வாகத் துறையில் ஆழ்ந்த அனுபவம் கொண்டவர் என்று கூறப்படுகிறது. இவர், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொறியியல் துறையில் வேதியியல் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். மனித காரணிகள், உளவியல், நிர்வாக மேலாண்மையில் எம்பிஏ என பல பட்டங்களைப் பெற்றுள்ளார். 

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் இவர் பெற்றவர் ஆவர்.

அதேபோல், உள்ளாட்சி துறை ஊராக வளர்ச்சி துறை, நகர்புற வளர்ச்சி துறையாக இந்த முறை பிரிக்கப்பட்டு இருக்கிறது. 

ஊராக வளர்ச்சி துறைக்கு கே.ஆர். பெரியகருப்பன், நகர்புற வளர்ச்சி துறைக்கு கே.என்.நேரு அமைச்சர்களாகப் பதவியேற்று இருக்கிறார்கள்.

குறிப்பாக, சென்னை வெள்ளம், கொரோனா போன்ற பல இக்கட்டான காலகட்டத்தில் கள பணியாளராகப் பார்க்கப்படுபவர் மா.சுப்பிரமணியன். இவருக்குச்  சுகாதாரத் துறை அமைச்சர் பதவி தற்போது வழங்கப்பட்டு இருக்கிறது. 

மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு மருத்துவர் இல்லாத ஒருவர் சுகாதாரத் துறை அமைச்சராக தற்போது ஆகியிருக்கிறார். அத்துடன், மா.சுப்பிரமணியன் தற்போது தான் முதல் முறையாக அமைச்சராகப் பதவியேற்று இருக்கிறார்.

முக்கியமாக மத்திய அரசு மாற்றியுள்ள துறைகளின் தன்மைக்கு ஏற்ப, தமிழக துறைகளும் தற்போது மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றன. 

அதன் படி, ஜல் சக்தி என்பது நீர்ப்பாசனம் என்றும், skill India என்பது, திறன் மேம்பாடு என்றும், 2 புதிய துறைகள் தற்போது உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

திமுக வில் நீண்ட அனுபவம் கொண்டவர் சக்கரபாணி எம்.எல்.ஏ. ஒட்டன்சத்திரம் தொகுதியில் தற்போது 6 வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் கடந்த 1996 முதல் 2021 தேர்தல் வரை தொடர்ந்து வெற்றி பெற்று இருக்கிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டப்பேரவை திமுக கொறடாவாக இவர் இருந்திருக்கிறார்.

அதே நேரத்தில், திமுக சட்டமன்ற உறுப்பினராகப் பல ஆண்டுகளாக அதாவது 6 முறை சக்கரபாணி இருந்தாலும், இந்த முறை தான் அவருக்கு உணவுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது.

மேலும், புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் இந்த அமைச்சரவையில் மிக குறைந்த வயதுள்ளவர் சுற்றுலாத்துறை அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மதிவேந்தன் ஆவர். மருத்துவரான இவர், ராசிபுரம் தனி தொகுதியில் முதல் முறையாகப் போட்டியிட்டு தற்போது வெற்றி பெற்றிருக்கிறார்.

இந்த முறை தமிழக அமைச்சரவையில், தென் மாவட்டத்தைச் சேர்ந்த அதிக பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மீன்வளத்துறை கொடுக்கப்பட்டு உள்ளது. தற்போது அந்த துறைக்கு அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சர் ஆகி இருக்கிறார்.

அதே போல், தமிழக அமைச்சரவையில் 15 பேருக்கு தற்போது முதல் முறையாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், 19 பேர் ஏற்கனவே அமைச்சர்களாக அனுபவம் கொண்டவர்கள் ஆவர்.