தமிழகத்தில் 3 முக்கிய ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ள நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையராக சங்கர் ஜிவாலை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமைச் செயலாளர் பிரபாகர் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த மகேஷ்குமார் அகர்வால் இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

அதே போல், உளவுத்துறை ஏடிஜிபியாக கோவை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் தற்போது நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், ஏற்கனவே மதுரை போலீஸ் கமிஷனராக பணியாற்றி இருக்கிறார்.

அதே போல், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த ஜெயந்த் முரளி தற்போது மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாகத் தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

குறிப்பாக, உளவுத்துறை என்பது ஒரு மாநிலத்தின் தலை எழுத்தையே நிர்ணயிக்கக் கூடியது. ஒரு மாநில ஆட்சியின் நல்லது, கெட்டது பற்றிய தகவல்களை முன்கூட்டியே ஆராய்ந்து அது பற்றிய தகவல்களை அரசுக்கு அறிக்கை அளித்து ஆட்சியைத் தலை நிமிரச் செய்வதே உளவுத்துறையின் தலையாய பணியாகும். இப்படியாக, மாநில ஆட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது உளவுத்துறை ஆகும். அந்த அளவுக்குத் தமிழக காவல் துறையில் உளவுத்துறை கூடுதல் டிஜிபி பொறுப்பு என்பது, மிகப்பெரிய அளவுக்கு முக்கியம் வாய்ந்து திகழ்கிறது.

அதனால், இந்த பதவியில் அமர்த்தப்படும் அதிகாரிகள் மிக அனுபவம் உள்ளவர்களாகவே பெரும்பாலும் இருப்பார்கள். ஆட்சி நிர்வாகத்தில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுவதால், அதில் அனுபவம் மிக்க அதிகாரிகள் தான் அங்கு அதிகமாக நியமிக்கப்படுவார்கள். 

அந்த வகையில் தமிழக காவல்துறையின் உளவுத்துறையில் அதிக அனுபவம் வாய்ந்தவரான டேவிட்சன் தேவாசீர்வாதத்தை உளவுத்துறை கூடுதல் டிஜிபியாக புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே காலியாக இருந்த இந்த பொறுப்பை உளவுத்துறை ஐஜியான ஈஸ்வர மூர்த்தி கூடுதலாகக் கவனித்துக்கொண்டு இருந்தார். தற்போது, புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், அந்த இடத்திற்கு புதிய அதிகாரியைப் புதிதாக வந்த தமிழக அரசு நியமித்து உள்ளது.

காவல்துறையில் மிக முக்கிய பொறுப்பான உளவுத்துறைக்கு அமர்த்தப்பட்டுள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம் யார் என்றால், “மாநில உளவுத்துறையில் எஸ்பியாகவும், டிஐஜியாகவும், ஐஜியாகவும் நீண்ட காலங்கள் பணிபுரிந்து ஆட்சியாளர்களின் குட்புக்கில் இடம் பிடித்தவர் ஆவர். 

மதுரை காவல் ஆணையராக பணிபுரிந்த போது, டேவிட்சன் அங்கு பல புதிய மாற்றங்களைக் கொண்டு வந்தார். கியூ பிரிவு எஸ்பியாக அவர் பணிபுரிந்த போது விடுதலை புலிகள் இயக்கத்தை கண்காணித்தும், மாவோயிஸ்ட் ஊடுருவல் குறித்த பணிகளைச் சிறப்பாக செய்து உயர் அதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெற்றார். 

அத்துடன், பால்ரஸ் குண்டுவெடிப்பு, தூத்துக்குடி மாவட்ட கன்னிவெடி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளைச் சிறப்பாக கையாண்டதற்காகப் பாராட்டுக்களை பெற்றிருக்கிறார். 

முக்கியமாக, “காவல் துறையில் மனித நேயம் மிக்க அதே சமயத்தில் நேர்மையான அதிகாரி என போற்றப்படுவர் டேவிட்சன் என்று சக காவல் துறை அதிகாரிகளே பாராட்டுவார்கள்” என்பது கவனிக்கத் தகுந்த விசயமாகும்.