“முழு ஊரடங்கை அமல்படுத்தாவிடில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து, தமிழக மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வரும் நிலையில், வருகின்ற மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல், 24 ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறபித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக விளக்கம் அளித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காணொலி காட்சி மூலமாகத் தமிழக மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “வரும் 10 ஆம் தேதி முதல், 24 ஆம் தேதி வரை அமல்படுத்தப்படும் முழு ஊரடங்கை மக்கள் முறையாகப் பின்பற்ற வேண்டும்” என்று வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், “தமிழகத்தில், முழு ஊரடங்கை அமல்படுத்தாவிடில், கொரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விடும்” என்றும், மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். 

இதனால், “தமிழகத்தில் 14 நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதன்படி வரும் திங்கள் கிழமை முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும், “14 நாள்கள் அனைவரும் வீட்டிலேயே இருந்தால், கொரோனா பரவல் சங்கிலியை உடைத்துவிடலாம். ஊரடங்கின்போது, மக்கள் அனைவரும் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தொற்றுப் பரவலைக் குறைத்துவிடலாம்” என்றும், அவர் கூறினார். 

“எனவே, முழு ஊரடங்கை மக்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், வீட்டிலேயே இருங்கள். முகக்கவசம் அணியுங்கள்” என்றும் முதலமைச்சர் தமிழக மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார். 

அதே போல், “2 வாரங்களில் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவிட்டால், அவற்றைக் கட்டுப்படுத்துவது இன்னும் சவாலாகிவிடும் என்றும், கொரோனா முதல் அலையை விட இந்த 2 வது அலை மிக மோசமாக உள்ளது என்றும், இது கஷ்டமான காலம் தான், ஆனால் கடக்க முடியாத காரியமல்ல” என்றும், முதலமைச்சர் தன்னம்பிக்கையுடன் பேசி உள்ளார்.

குறிப்பாக, “நேற்று நடத்திய அதிகாரிகள் கூட்டத்தில் நான் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன் என்றும், 'முழு உண்மையைச் சொல்லுங்கள்' என்று நான் அதிகாரியைக் கேட்டுக்கொண்டேன் என்றும், அந்த வகையில் கொரனோ பெருந்தொற்றுக்கு எதிராக நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் அடைந்துள்ளது” என்றும், சுட்டிக்காட்டினர். 

“தமிழக அரசின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு நீங்கள் அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களிடையே உரையாற்றினார்.