டெல்லி கொடுத்த க்ரீன் சிக்னல் காரணமாகத் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார்  ஓ.பன்னீர்செல்வம்.

தமிழகத்தில் நடந்து முடிந்த 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக 65 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியை அடைந்துள்ளது. அத்துடன், அதிமுக கூட்டணி கட்சிகள் வெறும் 10 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றன. 

இந்த நிலையில், 16 வது சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் அதிமுக இடம்பெற இருக்கிறது.

மேலும், “அதிமுகவில், எதிர்கட்சித் தலைவர் யார்?” என்ற மோதல், தற்போது மிகத் தீவிரமாக வலுத்து வருகிறது. 

அதிமுக ஆளும் கட்சியாக இருந்த போதே, முதல்வர் வேட்பாளர் சர்ச்சை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து, அதன் பிறகு அடங்கியது. முதல்வர் வேட்பாளர் பிரச்சனையானது எப்படி முடிவுக்கு வந்ததோ, அது போலவே, இந்த பிரச்சனையும் முடிவுக்கு வரும் என்றும், அக்கட்சித் தொண்டர்கள் பேசத் தொடங்கி உள்ளனர். 

இந்த சூழ்நிலையில், அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மாலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை ஏற்க இருக்கிறார்கள். இதனை, அதிமுக தலைமைக் கழகம் உறுதி செய்துள்ளது. 

இந்த சூழலில், தமிழக சட்டமன்ற எதிர்கட்சிக் தலைவராக இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தேர்வு செய்யப்பட இருக்கிறார் என்ற தகவல்கள் தற்போது வெளியாகி அதிமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதனால், “அதிமுக வில், முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். இப்படியாக, அவர் பல தடவை ஏமாந்தவர் இந்த முறை ஏமாறத் தயாராக இல்லை என்று, அதிமுகவினர் சிலர் வெளிப்படையாகவே பேசத் தொடங்கி உள்ளனர். 

குறிப்பாக, இது தொடர்பாக பிரச்சனை எழுந்த போது, “4 ஆண்டுகளாக முதல்வராக நீங்கள் இருந்துவிட்டீர்கள், ஆட்சி தொடர்ந்து இருந்தால் மீண்டும் நீங்கள் தான் முதல்வர். ஆனால், எதிர்க்கட்சியாக அமரும்போது, எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பையும் நீங்களே அனுபவிப்பீர்கள் என்றால், நான் எதற்கு ஒருங்கிணைப்பாளராக இருக்க வேண்டும்?, இந்த 5 ஆண்டு நான் தான் எதிர்க்கட்சித் தலைவர்” என்று, ஓ.பன்னீர்செல்வம், வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமியிடம் கூறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பிலோ, “மேற்கிலும், வடக்கிலும் தான் கட்சி அதிக தொகுதிகளை ஜெயித்து உள்ளது. தெற்கில் கட்சி ஜெயிக்க இல்லை. அப்படி இருக்கையில், எப்படி ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவராக்க முடியும்?, முதல்வராக இருந்த, முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் தான் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்க வேண்டும்” என்கிற வாதத்தை அவர் முன் வைக்கிறார். 

இப்படியாக, இருவரும் விட்டுக்கொடுக்காத நிலையில் இந்த பிரச்சனை, டெல்லி தலைமைக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், “கருணாநிதி முதல்வராக இருந்த போதே சட்டமன்ற எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை வழி நடத்தியவர் ஓ.பன்னீர்செல்வம் என்றும், அவர் அவை முன்னவராகவும் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவர் என்றும், 3 முறை முதல்வராகப் பணியாற்றியவர்” என்றும், கூறப்பட்டு இருக்கிறது. 

இப்படி எல்லாவற்றுக்கும் மேலாக, “கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்றும், தற்போது வலிமையான எதிர்க்கட்சியாக வெற்றி பெற்றுள்ளதால், ஓ.பன்னீர்செல்வம் சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்படுவதே சரியாக இருக்கும்” என்று, டெல்லியும் உத்தரவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த பிரச்சனையை ஆடிட்டர் குருமூர்த்தி, முன்னாள் அமைச்சர் தங்கமணி மூலமாக முதல்கட்ட பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறுகிறார்கள். 

இதனையடுத்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா, எடப்பாடி பழனிச்சாமியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், இதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி இதனை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், தற்போது தொடங்கி உள்ள எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அதிமுக எதிர்க்கட்சித் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் முறைப்படித் தேர்வு செய்யப்படுவார்” என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.