தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல், 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் மிகத் தீவிரமாகப் பரவிக்கொண்டு இருக்கும் கொரோனா பெருந்தொற்றின் 2 வது அலையானது, மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இப்படியாக, தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதால், பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு உள்ளன. 

ஆனாலும், கொரோனா வைரஸ் தொற்று பரவலானது, தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதனால், தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதைப் போலவே, தமிழகத்திலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்று மருத்துவர்கள் சங்கங்கள் தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில், நேற்று தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நேற்று மாலை திடீரென்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, அனைத்து துறை அதிகாரிகளும், “தமிழ்நாட்டில் உடனடியாக முழு பொது முடக்கத்தை அமல்படுத்த வேண்டும்” என்று, வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

அத்துடன், அண்டை மாநிலங்களில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளதையும், அதனால் அங்கு தற்போது கொரோனா பாதிப்பு முழு அளவில் குறைந்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்கள்.

இவற்றையெல்லாம் கேட்டுக்கொண்ட தமிழக அரசு, “கொரோனா  பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி முதல், 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக” அறிவித்து உள்ளது. 

முக்கியமாக, “தமிழகம் முதுவதும் மளிகை, காய்கறி, இறைச்சிக் கடைகளைத் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை” விதிக்கப்பட்டு உள்ளன. 

“தமிழகத்தில், 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால், நாளை மற்றும் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக” தமிழக அரசு தெரிவித்து உள்ளது. 

அதன் படி, “இன்றும், நாளையும் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறந்திருக்கும்” என்றும், தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

முக்கியமாக, “இந்த பொது முடக்க காலத்தில், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும், நியாய விலைக்கடைகள் 12 மணி வரை செயல்படும்” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதனிடையே, கேரளாவில் இன்று முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இந்த ஊரடங்கானது, வரும் 16 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.