“அதிமுகவில் எதிர்க்கட்சித் தலைவர் யார்?” என முடிவு எடுக்க முயன்றபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், “அதிமுக தோல்விக்கு இபிஎஸ் முடிவுகளே காரணம்” என்று, ஒபிஎஸ் பகிரங்கமாகக் குற்றச்சாட்டி உள்ளது, அக்கட்சியினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது நடந்து முடிந்துள்ள 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்து உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வென்று எதிர்க் கட்சி அந்தஸ்தைப் பெற்று உள்ளது. 

இந்த நிலையில், “அதிமுகவின் எதிர்க்கட்சி தலைவர் யார்?” என்று முடிவு செய்வதில், அந்த கட்சியில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டு மிகப் பெரிய பேசும் பொருளாக மாறியிருக்கிறது. 

அதன் படி, சென்னையில் நேற்று மாலை நடைபெற்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்ற விவாதம் காரசாரமாக நடந்து உள்ளது. அப்போது, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மிகப் பெரிய அளவில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.

அதே நேரத்தில், கடைசி வரையில் இந்த பிரச்சனை தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்காமல், அந்த எம்.எல்.ஏக்கள் கூட்டம் வரும் திங்கள் கிழமை ஒத்திவைக்கப்பட்டது. 

இதனையடுத்து, ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று, ஜெயலலிதா சாமாதியில் மலர் தூவி மரியாதை செய்தனர். 

அப்போது, இரு தரப்பு தலைவர்களின் தொண்டர்களும் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தங்களுக்குத் தான் வர வேண்டும் என்று, மெரினாவில் முழக்கங்களை எழுப்பினர். 

குறிப்பாக, “தேர்தல் தோல்வி நீங்கள் தான் பொறுப்பு, நீங்கள் தான் காரணம்” என்று, ஒருவர் மாற்றி ஒருவர் மாறி மாறி பகிரங்கமாகக் குற்றம்சாட்டிக்கொண்டனர். 

முக்கியமாக, “தேர்தலில் செலவு செய்தது யார்? 234 தொகுதியிலும் உழைத்தது யார்? கொங்கு மண்டலத்தில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். எப்படி விட்டுக் கொடுப்பது என இபிஎஸ் பேசியதாகவும் கூறப்படுகிறது. 

அதற்குப் பதில் அளிக்கும் விதமாக, “நீங்கள் செலவு செய்த பணம், கட்சியினுடையது தானே தவிர உங்களுடையது அல்ல என்றும், வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவித்ததால் தான் தென் மாவட்டத்தில் வெற்றியை இழந்தோம்” என்றும், ஒபிஎஸ் பதில் அளித்து உள்ளார்.

அதன் தொடர்ச்சியாகவே, எதிர்க்கட்சித் தலைவர் யார் என முடிவு ஏதும் எட்டப்படாமல், மீண்டும் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், திங்கள் கிழமை முதல் 2 வாரங்களுக்குத் தமிழ்நாட்டில் பொது முடக்கம் அமலுக்கு வருகிறது.

இதன் காரணமாக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.