“திருமணம் நடந்தால் நாங்கள் பிரிந்து விடுவோம்” என்று, நட்பின் ஏக்கத்திலேயே இருந்து வந்த இணைபிரியாத தோழிகள் இருவர், ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 

கேரள மாநிலம் கொல்லம் அடுத்து உள்ள அஞ்சல் பகுதியை சேர்ந்த அணில் குமார் மகள் 21 வயதான அமிர்தா என்ற இளம் பெண்ணும், அது போன்று அங்குள்ள சடையமங்கலம் அடுத்து உள்ள ஆயுர் பகுதியை சேர்ந்த அசோகன் என்பவரின் மகள் 21 வயதான ஆர்யா என்ற இளம் பெண்ணும், அங்குள்ள கொல்லத்தில் உள்ள ஒரு கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்தனர்.

இவர்கள் இருவரும் கல்லூரியில் சேர்ந்தது முதல் இணைபிரியா தோழிகளாகப் பழகி வந்தனர். எங்கு சென்றாலும் அவர்கள் இருவரும் சேர்ந்து தான் சென்று வருவது வழக்கம். 

தற்போது, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கல்லூரி விடுமுறை விட்டால், தோழிகள் இருவரும் பிரிந்து அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர். இதனையடுத்து, அவர்கள் இருவரும் செல்போனில் அடிக்கடி பேசிக்கொண்டு வந்தனர். 

இப்படிப்பட்ட சூழ்நிலையில், இளம் பெண் அமிர்தாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முடிவு செய்தனர். இதற்காக, கேரளாவில் பல இடங்களில் மாப்பிள்ளை தேடி வந்தனர். இது குறித்து இளம் பெண் அமிர்தா, தனது தோழியான ஆர்யாவிடம் தெரிவித்து உள்ளார். 

அப்போது, “தனக்கு திருமணம் நடந்தால், உன்னை விட்டுப் பிரிந்து செல்ல வேண்டியது வரும் என்றும், இதனால் நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்றும், அமிர்தா தன் தோழியிடம் கூறியதாகத் தெரிகிறது. 

மேலும், இது குறித்து அமிர்தா தனது பெற்றோரிடம் கூறி உள்ளார். இதனைக் கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 

அத்துடன், பெற்றோர்கள் இருவரும் தங்கள் மகள் அமிர்தாவுக்கு அறிவுரை கூறி, திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி உள்ளார்கள். இந்த தகவலையும், அவர் தனது தோழியிடம் கூறி அழுதுள்ளார். இதனால், அவர்கள் இருவரும் மனவருத்தத்தில் இருந்து வந்தனர். அதன் தொடர்ச்சியாக வீட்டில் உள்ளவர்களிடம் எதுவும் பேசாமல் கடந்த சில நாட்களாக இருந்து உள்ளனர்.

குறிப்பாக, “வாழும் போது தான் நாம் சேர்ந்து வாழ முடியவில்லை. இதனால், சாகும்போதாவது நாம் ஒன்றாக சாவோம்” என்று அவர்கள் இருவரும் பேசி 
முடிவு செய்துகொண்டு, அவர்கள் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

அதன் படி, கடந்த 14 ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று, “வெளியே சென்று வருகிறோம்” என்று தங்களது வீட்டில் அவர்கள் இருவரும் கூறிவிட்டு, இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

அதன் பிறகு, அவர்கள் இருவரும் அன்று இரவு 7 மணிக்கு வைக்கம் அருகே செல்லும் மூவாற்றுப்புழா ஆற்றுக்கு வந்து உள்ளனர். அங்கு வந்ததும், மீண்டும் தங்களது பிரச்சனை குறித்து அவர்கள் பேசி உள்ளதாகவும் தெரிகிறது. அப்போதும் அவர்கள் தற்கொலை முடிவில் உறுதியாக இருந்ததால், 2 பேரும் சேர்ந்து கைகளை கோர்த்தவாறு செம்பு முறிஞ்சபுழா பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தனர். 

இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் கடும் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன், இது குறித்து அங்குள்ள தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இது தொடர்பாக அங்கு விரைந்து வந்த சடையமங்கலம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவிகள் 2 பேரையும் தேடினர். ஆனால், அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், நேற்று முன் தினம் காலையில் பூச்சாக்கள் காயலில் கிடந்த அமர்தாவின் உடல் மற்றும் மூவாற்றுப்புழா ஆற்றில் மிதந்த ஆர்யாவின் உடலானது போலீசாரால் மீட்கப்பட்டது. இருவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கோட்டயம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம், அந்த பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.