தங்க புதையலுக்கு ஆசைப்பட்டு மந்திரவாதியின் பேச்சை கேட்டு இரு சகோதரர்கள் தங்களது சொந்த குழந்தைகளை பலி கொடுக்க துணிந்த சம்பவம் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. 

அசாம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு திடுக்கிடும் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் இருந்து கிழக்கே அமைந்து உள்ள திமோவ்முக் கிராமத்தில் ஜமியூர் உசைன் மற்றும் சரிபுல் உசைன் ஆகிய இரு சகோதரர்கள், திருமணம் ஆன நிலையில், தங்களது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்கு வசித்து வருகின்றனர். சகோதரர்கள் இருவருக்கும் தலா 3 குழந்தைகள் உள்ளனர். 

மிகவும் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த இவர்களது வாழ்க்கை, சமீப காலமாக சர்ச்சைகளுக்கு உள்ளானது.

அதாவது, சகோதரர்கள் இருவரின் நடவடிக்கையிலும் பல்வேறு மாற்றங்கள் காணப்பட்டு உள்ளன. இதனால், அவர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த கிராம மக்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் பல அடுக்கடுக்கான புகார்களை அளித்தனர். கிராம மக்களின் புகாரின் படி, போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. 

இந்த இரு சகோதரர்களிடம் அந்த பகுதியைச் சேர்ந்த பெஜ் என்கிற மந்திரவாதி ஒருவர், தங்க புதையல் ஆசை காட்டி இருக்கிறார். 

அத்துடன், “உங்களுடைய குழந்தைகளைப் பலி கொடுத்தால், உங்களது வீட்டில் உள்ள மாமரத்தின் கீழ் மறைந்துள்ள தங்க புதையலை நீங்கள் காணலாம்” என்றும், கூறி இருக்கிறார்.

அந்த சாமியாரின் இந்த விபரீத பேச்சைக் கேட்ட சகோதரர்கள் இருவரும், தங்க புதையல் மீது பேராசை பட்டு உள்ளனர்.

மேலும், சாமியாரின் பேச்சை நம்பிய அவர்கள் இருவரும், தங்களுடைய குழந்தைகளை வீட்டிற்குள் அடைத்து வைத்து வந்து உள்ளனர். இதனால், தங்களது பிள்ளைகளை வெளியே விளையாட விடாமல், வீட்டிற்குள் அடைத்து வைத்து உள்ளனர். இந்த தகவல் எப்படியோ, அந்த கிராம மக்களுக்குத் தெரிய வந்தது.

இந்த தகவலை தெரிந்துகொண்ட அந்த கிராம மக்கள், சகோதரர்கள் இருவரையும், அவர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகளையும் பிடித்து, அந்த பகுதியில் உள்ள போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதன் காரணமாக, “முறையாகப் புகார் அளிக்காமல், சாட்சிகள் இல்லாமல் ஊர் மக்களின் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அந்த குடும்பத்தினரை தங்களது காவலின் கீழ் வைத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். ஆனால், இப்படியான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர்கள், “குழந்தைகளின் உடல் நலனுக்காக, சாமியார் பெஜ்ஜிடம் ஆலோசனை கேட்டோம்” என்று, தெரிவித்து உள்ளனர். 

மேலும், “சாமியார், எங்களிடம் எந்த ஆசையும் காட்ட வில்லை என்றும், குழந்தைகளை பலிகொடுக்க எதுவும் சொல்லவில்லை” என்றும், அவர்கள் கூறினார்கள்.

இதனையடுத்து, “இந்த புகாரில் இனி மந்திரவாதியைப் பிடித்து விசாரணை மேற்கொண்டால் மட்டுமே இந்த வழக்கில் தெளிவு வரும்” என்று போலீசார் முடிவு செய்து உள்ளனர். அதன் படி, போலீசார் அந்த சாமியாரை தேடிச் சென்ற போது, அவர் எப்போதும் இருக்கும் வழக்கமான இடத்தில் இல்லை என்றும், கூறப்படுகிறது. இதனால், அவர் தலைமறைவாகி விட்டதாகவும், அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அத்துடன், போலீசாருடன் சேர்ந்து, அந்த கிராம மக்களும் போலீசாரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.