கொரோனா பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருந்த பலரும் ஆன் லைனில் இருக்கும் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுகளில் பணத்தை கட்டி விளையாடினர். ஒரு கட்டத்தில் மனவேதனையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் தமிழகத்தில் நடைபெற்று வந்தது. 

ஆன்லைன் ரம்மி ஏற்படுத்திய மன வேதனையினால், அடுத்தடுத்து தற்கொலை சம்பவங்கள் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட தடை செய்வது குறித்து அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள், கூட்டணி கட்சியினர் என பலரும் தமிழகத்தில் கருத்து தெரிவித்து வந்தனர். அவற்றை தொடர்ந்து இம்மாத தொடக்கத்தில் (நவம்பர் 5), தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நவம்பர் 5 - ம் தேதி கோயம்புத்தூர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், ``அனைத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய அரசுக்கு கோரிக்கை வந்துகொண்டிருக்கின்றன. ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபடுவது மீது நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது" எனவும் முதல்வர் தெரிவித்தார்.

இருப்பினும், இந்த நடவடிக்கை எப்போது எடுக்கப்படும் என்பது பற்றி முதல்வர் தெரிவிக்கவில்லை. ஆகவே, ``ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்?" என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று (நவம்பர் 18) கேள்வி எழுப்பியுள்ளது.

ஆன்லைன் ரம்மி தடைகோரிய வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் புகழேந்தி கூறியதாவது,

``ஆன்லைன் ரம்மியை தடை செய்வதற்கு சட்டம் இயற்ற எவ்வளவு காலம் தேவைப்படும்?, சட்டமாக இயற்றப்படுமா?, விதியாக அமல்படுத்தப்படுமா? என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது?" 

இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை அரசு தரப்பிடம் நீதிபதிகள் இன்று கேட்டனர். இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய அதிக முக்கியத்துவடன் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதற்காக சட்ட வரைவு தயாரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், அரசுத் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு நவம்பர் 24ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர்.

தமிழக முதல்வருக்கு முன்னராகவே, புதுவை முதல்வர் ஆன்லைன் ரம்மி தடை குறித்து பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த அக்டோபர் 21 ம் தேதி, ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அதிகாரபூர்வமாக கூறினார்.
மேலும் மாநில அரசின் கீழ் வராதததால் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை மத்திய அரசு தான் தடைவிதிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர் ரம்மி விளையாட்டில் வென்றதாக வரும் விளம்பரத்தையும் தடைசெய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

தற்போதைய ஸ்மார்ட்போன் யுகத்தில் ஏராளமான இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமைகளாக இருந்துவருகின்றனர். குறிப்பாக, பப்ஜி என்ற ஆன்லைன் விளையாட்டு இந்திய அளவில் ஏராளமான இளைஞர்கள் அடிமைகளாக இருந்துவந்தனர். ஆனால், சமீபத்தில் இந்த ஆன்லைன் விளையாட்டுக்கு மத்திய அரசு தடைவிதித்தது. அதேபோல ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கும் பலரும் அடிமையாக இருந்துவருகின்றனர். இளைஞர்கள் மட்டுமில்லாமல் திருமணமானவர்களும் இந்த விளையாட்டுக்கு அடிமையாக இருக்கின்றனர். இந்த விளையாட்டினால் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்யும் நிகழ்வுகளும் அவ்வப்போது நடைபெற்றன. அதனால், இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளைத் தடை செய்யவேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகிறது