சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2D என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது. படத்தில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தார். நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, பரேஷ் ராவல், காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் பணிகளை செய்திருந்தார். கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் இல்லாமல் அமேசான் ஓடிடியில் இப்படம் வெளியானது. திரையுலகினர் பலரும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவில் முதல் பட்ஜெட் விமானப் பயணத்தை உருவாக்கியவர் ஜி.ஆர்.கோபிநாத். அவருடைய வாழ்க்கையை மையப்படுத்தியே இப்படம் உருவாகியுள்ளது. சூரரைப் போற்று படம் பார்த்துவிட்டு ஜி.ஆர்.கோபிநாத் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சூரரைப் போற்று... நிறையக் கற்பனை இருந்தாலும், என்னுடைய புத்தகத்தின் மையக் கருவை அற்புதமாகப் படம்பிடித்துள்ளது. உண்மையான ரோலர் கோஸ்டர் அனுபவம். ஆம், நேற்றிரவு பார்த்தேன். 

நினைவுகளைத் தூண்டிய பல குடும்பக் காட்சிகளில் சிரிப்பையும் அழுகையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. நாடகத்தன்மை இருந்தாலும், பெரும் முரண்பாடுகளுடன் கூடிய பின்தங்கிய கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட ஒரு தொழில்முனைவோரின் போராட்டங்கள் மற்றும் இன்னல்களுக்கு எதிரான நம்பிக்கைக்கு உண்மை சேர்க்கிறது என்று பாராட்டினார். 

அமேசான் ப்ரைமில் மீண்டும் மீண்டும் பார்த்து கொண்டாடி வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். படத்தின் பாடல் வீடியோக்களை ஒவ்வொன்றாக வெளியிட்டது படக்குழு. இந்நிலையில் சூரரைப் போற்று படத்தின் புதிய மேக்கிங் வீடியோவை வெளியிட்டது அமேசான் ப்ரைம். ஹீரோயின் பொம்மி பாத்திரம் உருவான விதத்தை இந்த வீடியோவில் காண்பித்துள்ளனர். 

சூரரைப் போற்று படத்தில் சூர்யாவுக்கு அடுத்தபடியாக முக்கியமான பாத்திரம் என்றால், அது மாறாவின் மனைவி சுந்தரி எனும் பொம்மி. தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அபர்ணா. மதுரை பாஷையை அபர்ணா எப்படி பயின்றார். காஸ்ட்டியும் துவங்கி நடிப்பு வரை, பொம்மி பாத்திரத்திற்கு தன்னை தயார் படுத்திக்கொள்கிறார் அபர்ணா. இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அருகில் நின்று கேரக்டரை செதுக்கும் இயக்குனர் சுதா கொங்கராவையும் பாராட்டி வருகின்றனர் ரசிகர்கள்.