குழப்பமான மன நிலையில் இருந்த காதலர்களை போலீசார் பஞ்சாயத்து செய்து சேர்த்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு வினோத சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் 20 வயதான ராம்பிரியா, அங்குள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். 

அதே போல், இளம் பெண் ராம்பிரியாவின் வீட்டின் அருகே தங்கராஜ் குடும்பத்தினர் வசித்து வந்தனர். அப்போது, தங்கராஜின் மகன் 29 வயதான விக்னேஷ், இன்ஜினீயரிங் படித்து முடித்துள்ள நிலையில், தற்போது பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

அதே நேரத்தில், இளம் பெண் ராம்பிரியாவும், இளைஞர் விக்னேஷீம் அருகில் அருகில் வசிப்பதால், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க ஆரம்பித்து உள்ளனர். ஒரு கட்டத்தில் விக்னேஷும் - ராம்பிரியாவும் தீவிரமாக காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் காதலர்களாக அந்த பகுதியில் பல இடங்களுக்கு சேர்ந்து ஊர் சுற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இப்படி, அவர்கள் இருவரும் அடிக்கடி ஜோடியாக சேர்ந்து ஊர் சுற்றி வந்த நிலையில், இவர்களின் காதல் விசயம், விக்னேஷ் வீட்டில் தெரியவந்து உள்ளது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். அப்போது, இந்த விசயம் இளம் பெண் வீட்டிற்கும் தெரிய வந்தது. ஆனால், இளம் பெண் வீட்டில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர்.

இதனால், பொருத்து பொருத்து பார்த்த காதலி ராம்பிரியா, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து கோபத்தில் தனது தந்தையிடம் “எனக்கு உடனே வேறு மாப்பிள்ளை பாருங்கள்” என்று கூறி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, வேதாரண்யம் அருகே உள்ள தாணிக்கோட்டகம் பகுதியை சேர்ந்த ஒரு இளைஞருக்கும், ராம்பிரியாவுக்கும் திருமண பேசி முடிவான நிலையில், அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது. அதன் படி, வரும் 25 ஆம் தேதி ராம்பிரியாவுக்கு திருமணம் நடைபெற இருந்தது. 

இந்த தகவலை கேள்விப்பட்டு, கடும் அதிர்ச்சியடைந்த காதலன் விக்னேஷ், கடந்த 2 நாட்களுக்கு முன்பு காதலி ராம்பிரியா வீட்டுக்கு சென்று சத்தம் போட்டு உள்ளார். அப்போது. “என்னை தான் நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், என்னை விட்டு நீ வேறு யாரையாவது திருமணம் செய்ய நினைத்தால், நாம் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை உனது வருங்கால கணவரிடம் காட்டி விடுவேன்” என்றும், கூறி மிரட்டி உள்ளார்.

இது தொடர்பாக யோசித்து முடிவு செய்த இளம் பெண் ராம்பிரியா, “தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி” கேட்டு, காதலன் விக்னேஷின் வீட்டுக்கு ராம்பிரியா சென்று உள்ளார். அப்போது, காதலன் விக்னேஷ் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு, அங்கிருந்து வேறு ஊருக்குச் சென்று தலைமறைவாகி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த இளம் பெண் ராம்பிரியா, திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், காதலன் ஓடி மறைந்துகொண்டது தொடர்பாக புகார் அளித்தார்.

இது தொடர்பாக புகாரைப் பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அமைதியாக இருந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம் பெண் ராம்பிரியா, காதலன் விக்னேஷ் வீட்டின் முன்பு திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், தர்ணா போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து செல்லும் படி அறிவுரை வழங்கி உள்ளனர்.

ஆனால், அவர் போராட்டத்தைக் கைவிட மறுத்ததோடு, “என்னை காதலன் விக்னேஷ் திருமணம் செய்யும் வரை, இங்கிருந்து நான் செல்ல மாட்டேன்” என்று, வரும்படியாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போலீசார், வேறு வழியின்றி, விக்னேஷை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர். 

இந்த பேச்சு வார்த்தையில், ராம்பிரியாவை திருமணம் செய்து கொள்ள விக்னேஷ் சம்மதம் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து, காவல் நிலையம் அருகே உள்ள ஒரு கோயிலில் வைத்து, காதலர்கள் இருவருக்கும் போலீசாரே திருமணம் செய்து வைத்து, அவர்களைத் திருமணப் பந்தத்தில் சேர்த்து வைத்தனர். இந்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.