50 க்கும் மேற்பட்ட சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பொறியாளர் ஒருவர், சிறுமிகளை ஆபாச வீடியோ எடுத்து இணையத்தில் விற்பனை செய்து வந்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் நீர்ப்பாசன துறையின் இளநிலை பொறியாளர் ஒருவர், அந்த பகுதியைச் சேர்ந்த சிறுமிகளை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாகவும், அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்துக்கொண்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருவதாகவும் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இது தொடர்பாக போலீசார் மிகவும் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர். ஆனாலும், இந்த வழக்கு சிபிஐ வசம் சென்றது.

இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் மிகவும் ரகசியமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சம்மந்தப்பட்ட நீர்ப்பாசன துறையின் இளநிலை பொறியாளரை பொறி வைத்துப் பிடிக்க காத்திருந்தனர். அதன் படி, சிபிஐ அதிகாரிகளுக்கு சில முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளாகக் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்து, அந்த பாலியல் வன்கொடுமை காட்சிகள் மற்றும் புகைப்படங்களைச் சர்வதேச அளவில், அந்த நபர் விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, உத்தரப் பிரதேச மாநிலம் நீர்ப்பாசன துறையின் இளநிலை பொறியாளரை சிபிஐ அலுவலர்கள் அதிரடியாகக் கைது செய்தனர்.

இதனையடுத்து, அவரிடம் தீவிரமாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், “ இந்த இளநிலை பொறியாளர் சித்ரகூட், பண்டா மற்றும் ஹமீர்பூர் மாவட்டங்களில் 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது.

குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அங்குள்ள ஹமிர்பூர், சித்ரகூட், பண்டா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறுமிகளை அவர் வற்புறுத்தி இந்த பாலியல் பலாத்கார கொடூரங்களை அவர் நிகழ்த்தி இருப்பது தெரிய வந்தது.

முக்கியமாக, “சிறுமிகளுக்கு பிடிச்ச பொம்மைகள், செல்போன்கள், எலக்ட்ரானிக் பொருட்களைச் சிறுமிகளிடம் காண்பித்து அவர்களை ஈர்த்து, அதன் பிறகு அந்த சிறுமிகளிடம் அவர் தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததும்” கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், “சிறுமிகளை ஆபாசமாக வீடியோ எடுத்து, அதனை இணையத்திலும் விற்பனை செய்து வந்ததும் உறுதி செய்யப்படப்பட்டது. இதனையடுத்து, அதிகாரிகள், அந்த இளம் பொறியாளர் வீடடில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் 8 லட்சம் ரூபாய் பணம், லேப்டாப், பாலியல் பொம்மைகள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். 

இதையடுத்து, அதிகாரிகள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, இளநிலை பொறியாளருக்கு நீதிபதி ஒரு நாள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார். அதன் தொடர்ச்சியாக, இளநிலை பொறியாளரிடம் சிபிஐ அதிகாரிகள் தொடர்ச்சியாக விசாணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.