காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை பிரித்து வைத்த பெண்ணின் அண்ணனை, காதல் கணவன் வெட்டிக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு பயங்கர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்து உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது பாஸ்கர் என்பவர், அந்த பிளஸ் டூ மாணவியை காதலித்து வந்தார். இதனால், அந்த மாணவியும், பாஸ்கரை  காதலித்து வந்தார். 

இருவரும் காதலர்களாக மாறிய பிறகு, ஊரில் உள்ளவர்களுக்கு யாருக்கும் தெரியாமல் காதல் ஜோடிகள் இருவரும் அடிக்கடி வெளியூர் சென்று ஊர் சுற்றி வந்தனர். இதனையடுத்து, அவர்களுக்குள் காதல் இன்னும் நெருக்கமானதால், அவர்களால் பிரிந்து இருக்க முடியவில்லை. இதன் காரணமாக, கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காதலர்கள் இருவரும், தங்களது வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்து கொண்டனர். 

இந்த தகவல் காதலர்கள் இருவரின் வீட்டிற்கும் தெரிய வந்தது. ஆனால், திருமணம் ஆன பெண்ணுக்கு 18 வயது நிரம்பாததால், உறவினர்கள் காதல் ஜோடிகளை பிடித்து பஞ்சாயத்துப் பேசி உள்ளனர். இதில், பெண்ணின் பெரியப்பா மகனான 27 வயது அருள் குமார் மற்றும் அவரது குடும்பத்தினர்கள், காதலர்கள் இருவரையும் எப்படியோ பேசி பிரித்து வைத்து உள்ளனர். 

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த காதலன் பாஸ்கரன், தனது காதல் திருமணத்தைத் தடுத்து நிறுத்திய காதலியின் அண்ணன் அருள் குமாரை, எப்படியும் கொலை செய்ய வேண்டும் என்று, திட்டம் போட்டு உள்ளார். 

அதன் படி, கடந்த 15 ஆம் தேதி மாலை பாஸ்கர், தனது 20 வயது நண்பர் ஹேம்நாத்துடன் இருசக்கர வாகனத்தில் ஊரை சுற்றி வந்து உள்ளார். 

அப்போது, அங்குள்ள மாரிவளவு பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் அருகே காதலியின் அண்ணன் அருள் குமார், தனியாக இருந்ததை பாஸ்கர் கவனித்து உள்ளான். “இது தான் பழி தீர்க்க சரியான சந்தர்ப்பம்” என்று, எண்ணிய காதலன் பாஸ்கர், தனது வண்டியில் வைத்திருந்த ஆயுதங்களை எடுத்துக்கொண்டு பின் பக்கமாக மெதுவாகச் சென்று, தனியாக இருந்த காதலியின் அண்ணன் அருள் குரை சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் படி, சம்பவ இடத்திற்கு வந்த அங்குள்ள ஜலகண்டாபுரம் போலீசார், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அருள் குமாரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்து உள்ளார். 

அத்துடன், இது தொடர்பாக ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகள் இருவரையும் தேடி வந்த நிலையில், தற்போது அவர்கள் இருவரையும் கைது செய்து உள்ளனர். அவர்கள் இருவரிடமும் தற்போது போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசார் விசாரணையில், 18 வயது நிரம்பாத மைனர் பெண்ணை காதலிக்க இடையூறு ஏற்பட்டதால், இந்த கொலை சம்பவம் அரங்கேறி உள்ளதாகத் தெரிவித்தனர்.

இதனால், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால், காதலனை நம்பிச் சென்று திருமணம் செய்துகொண்ட அந்த பெண், தற்போது அண்ணனைக் கொன்ற கொலை பழியோடு அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.