கல்லூரி மாணவியை 2 வது திருமணம் செய்து வைக்கக் கோரி திமுக துணை வட்ட செயலாளரின் மகன் தீக்குளித்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தி.நகர் பகுதியை சேர்ந்த 141 வார்டு திமுக துணை வட்ட செயலாளராக சோமசுந்தரம் என்பர் இருந்து வருகிறார். இவருக்கு, 33 வயதான திருமுருகன் என்ற மகன் இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ள நிலையில், மனைவியைப் பிரிந்து தனிமையில் வாழ்ந்து வருகிறார்.

அதே நேரத்தில், தனது குடும்ப நண்பரின் மகள் 18 வயது மதிக்கத்தக்கக் கல்லூரி மாணவியை திருமணம் செய்து வைக்கக் கோரி, கடந்த 2 மாதமாகத் தனது பெற்றோரை அவர் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், இதனை அவரது பெற்றோர் யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான திருமுருகன், கடும் விரக்தியடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக காணப்பட்டு உள்ளார். 

இதனையடுத்து, நேற்றைய தினம், அந்த மாணவியின் வீட்டுக்கு பெட்ரோல் கேனுடன் சென்ற திருமுருகன், “உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து தாருங்கள்” என்று வற்புறுத்தி உள்ளார். ஆனால், மாணவியின் குடும்பத்தார் ஒத்துழைக்கவில்லை என்றும், கூறப்படுகிறது.

இதன் காரணமாக, பெட்ரோலைத் தன் மீது ஊற்றிக்கொண்ட திருமுருகன், தன்னை தானே தீ வைத்துக்கொண்டு, கொளுத்திக் கொண்டார். இதனால், அவர் உடலில் தீ பற்றி எரிந்த நிலையில், வலியால் அலறி துடித்து உள்ளார். அப்போது, இதனைப் பார்த்து பதறித் துடித்த அக்கம் பக்கத்தினர், திருமுருகன் மீது பற்றி இருந்த நெருப்பை ஓடி வந்து அணைத்தனர். 

மேலும், அங்கிருந்தவர்கள் காவல் நிலையத்துக்கு இது தொடர்பாகத் தகவல் தெரிவித்தனர். இது குறித்து விரைந்து வந்த காவல் துறையினர், அவரை உடனடியாக மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன், அவருக்கு சுமார் 25 விழுக்காடு தீக்காயங்கள் ஏற்பட்டு உள்ளதாகவும், அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் 
தெரிவித்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், திருமுருகனின் தற்கொலைக்குக் காரணம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, கல்லூரி மாணவியை 2 வது திருமணம் செய்து வைக்கக் கோரி, திமுக துணை வட்ட செயலாளரின் மகன் தீக்குளித்த சம்பவம், சென்னை மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், கொலை குற்றவாளியைக் கைது செய்யச் சென்ற கர்நாடகா காவல் துறையினரை, குற்றவாளி ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், காயமடைந்துள்ள காவலர் மற்றும் குற்றவாளி விஸ்வா ஆகிய இருவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல் துறையின் தகவல்படி, விஸ்வா மீது தற்போது வரை 11 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.