தமிழ் திரையுலகில் பல படங்களில் குணச்சித்திர பாத்திரத்தில் நடிப்பவர் தவசி. கருப்பன் குசும்புக்காரன் என்ற ஒற்றை வசனத்தின் மூலம் பிரபலமடைந்தவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில், நடிகர் சூரிக்கு அப்பாவாக இவர் நடித்த கதாபாத்திரம் பலராலும் பாராட்டப்பெற்றது. குறி சொல்லும் வேடம், சாமியாடும் பாத்திரம் இவருக்கு அருமையாக பொருந்தும். 

சில தினங்களுக்கு முன்பு உடல் நலம் குன்றியவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்த போது அவருக்கு உணவு குழாயில் புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. தற்போது மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் தவசி. 

மருத்துவச் சிகிச்சை கிடைத்தாலும் குடும்ப பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாகவும், நடிகர்கள் தனக்கு உதவ வேண்டும் என தவசி கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து நடிகர் தவசிக்கு திரைப்பிரபலங்கள் உதவி செய்து வருகின்றனர். நேற்று அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய விஜய் சேதுபதி, கவலைப்படாத மாமா பாத்துக்கலாம், சீக்கிரம் குணமடைந்து வீடு திரும்புவீங்க.. என்று என ஆறுதல் கூறினார். 

நடிகர் சிவகார்த்திகேயன் சார்பில் 25 ஆயிரம் ரூபாயை நிதியுதவியை சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற தலைவர் மோகன், தவசியிடம் நேரில் வழங்கினார், நடிகர் சூரியின் சார்பில் சூரியின் உணவக மேலாளர் சூரிய பிரகாஷ் 20 ஆயிரம் ரூபாயும், நடிகர் சௌந்திரபாண்டியன் 10ஆயிரம் ரூபாயையும் நேரில் வழங்கினார்கள். 

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் 1 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். நடிகர் மற்றும் இயக்குனரான சமுத்திரக்கனி 50 ஆயிரம் ரூபாய் வழங்கி உதவி செய்துள்ளார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்து வருகின்றனர் ரசிகர்கள்.